பிரச்சனைகளுக்கு வாய்ப்பு: டிஜிபி எதிர்பார்ப்பு!

politics

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும், ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மாலை ஆறு மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
பல இடங்களில் சிறு பிரச்சனைகள் எழுந்தபோது, அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல் துறைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலும், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாலும் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன். தேர்தலில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடமிருந்து சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல்கள் பெறப்பட்டு, காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கு காவல்துறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் பணி இன்னும் முடிவடையவில்லை. சில பிரச்சினைகள் இனிமேல் தோன்ற வாய்ப்பு உள்ளதால், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பிரச்சினையான பகுதிகள் கண்காணிக்கப்படுதல் வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவுப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
தீவிர கண்காணிப்புப் பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *