சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு: வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

politics

தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.25 அதிகரித்து, ரூ.850.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ஆக அதிகரித்தது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் ரூ.835க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, ரூ.825க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்(14.2கிலோ) விலையில் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரீதியான சிலிண்டர்(19 கிலோ) விலையில் ரூ.84.50 அதிகரித்து, ரூ.1,687.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு இன்று(ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிற நிலையில், தற்போது சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் இல்லதரசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்தது. அதுபோன்று தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும், ஒவ்வொரு சமையல் சிலிண்டருக்கும் ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

சிலிண்டர் விலை உயர்ந்துள்ள இந்த நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *