காங்கிரஸ்: கோஷ்டி கானத்துக்கு பதிலாக கட்சி கானங்கள்!

politics

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான கூட்டங்களை நடத்தவில்லை என்றாலும் கூட… ஆங்காங்கே அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த வகையில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இரவு தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தனது கடலூர் கீரப்பாளையம் வீட்டில் ஒரு எளிய நிகழ்வை நடத்தினார்.

ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு, வரும் தேர்தலை சந்திக்க முக்கியமான நிகழ்வு என்று அப்போது அழகிரி குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுக்கு என பிரத்யேகமான தேர்தல் பாடல்களை தயாரித்து அவற்றை சிடி க்களாக வெளியிட்டு வருகின்றன. திமுகவை வளர்ப்பதில் நாகூர் அனிபாவின் எட்டுக் கட்டை பாடல்கள் இன்றளவும் பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. எம்ஜிஆர் பாடல்களால் தான் ஆட்சியை பிடித்தார் என்பது வரலாறு.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் இருந்தாலும் கட்சிக்கான பொதுவான தேர்தல் பாடல்கள் தயாரித்து வெளியிடுவது என்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தன் முயற்சியில் காங்கிரஸ் கட்சிக்கு என தேர்தல் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். பாடல் வரிகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜிகே முரளிதரன் எழுதியுள்ளார். இந்தப் பாடல்கள் அடங்கிய சிடியை தான் அழகிரி தன் வீட்டின் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல்களை உருவாக்கிய திண்டுக்கல் மணிகண்டனிடம் பேசியபோது.. திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளிலும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும்போது அந்தந்தக் கட்சிகளுக்குரிய பாடல்களை ஒளிபரப்புவார்கள்.

தொண்டர்களுக்கு உற்சாகமாகவும் பொதுக்கூட்டத்திற்கு தயார்படுத்தும் வகையில் இருக்கும் இந்த மாதிரி பாடல்கள் காங்கிரஸில் கடந்த பல ஆண்டுகளாக புழக்கத்திலேயே இல்லை.

எனவே காங்கிரஸ் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 6 பாடல்கள் கொண்ட ஒலிப்பேழை உருவாக்க விரும்பினேன். இதுகுறித்து மாநில தலைவர் அழகிரியிடம் தெரிவிக்க, “தாராளமாக செய்யுங்க… மாவட்டம் மாவட்டமாக நான் சுற்றுப்பயணம் போகின்ற போது காங்கிரஸ் கட்சிக்கு என தனித்துவமான பாடல்கள் இல்லாதது ஒரு குறையாக தான் இருக்கிறது என்று கூறினார்.

உடனடியாக இந்த பாடல்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இப்போது ஒலிப்பேழையை அழகிரி கையாலேயே வெளியிட்டுள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு இந்த பாடல்கள் மட்டும் அல்ல… இனி உருவாக்கப்படும் பாடல்களும் கள ஆயுதமாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த பாடல்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய திருச்சி ஜி.கே. முரளிதரனிடம் பேசினோம்.

“சுமார் 40 வருடங்களுக்கு மேலாக நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். எனக்கு தெரிந்து 2001 க்குப் பிறகு இது போல காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாடல்கள் இப்போதுதான் வெளியிடப்படுகின்றன.

ராகுல் காந்தியின் ஆற்றல் பற்றியும் காங்கிரஸ் கட்சி காமராஜர் காலத்தில் இருந்து தமிழகத்துக்கு வகுத்தளித்த திட்டங்கள் பற்றியும் காங்கிரஸ் கட்சி மீது செய்யப்படும் தவறான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த பாடல்கள் அமைந்துள்ளன. பாடல் என்ற கலை வடிவத்துக்கான பிரச்சார முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி நெடு நாட்களாக மறந்திருந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் இனி புதிய பிரச்சார உத்திகள் வகுக்கப்படுகிறது” என்கிறார்.

கோஷ்டி கானங்களை மட்டுமே அறிந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சியில் கட்சி கானங்கள் ஒலிக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.

**வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *