வங்கக்கடல் ஓரத்தில் இந்தத் துணைக்கண்டத்தின் கிழக்கு முனையில், அணி அணியாகவும் தனியாகவும் இருபெரும் சக்திகள் மோதலைத் தொடங்கிவிட்டன. பரபரக்கும் மேற்குவங்கத் தேர்தல் களத்தில் வழக்குகளின் விசாரணைகள் துலக்கம் பெற்று வருகின்றன.
மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்கூட. இவரின் மனைவி ருஜிரா. ருஜிராவின் சகோதரி மேனகா கம்பீர். இந்த சகோதரிகள் இருவருக்கும் ஈஸ்டன் நிலக்கரிச் சுரங்க மோசடியில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. குனுஸ்டோரியா, கஜோரியா ஆகிய பகுதிகளில் உள்ள பொதுத்துறைக்குச் சொந்தமான ஈஸ்டன் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியைக் கடத்தியது, சட்டவிரோதமாக நிலக்கரியை அள்ளிச்சென்றது தொடர்பாக கடந்த நவம்பரில் மத்திய புலனாய்வு அமைப்பு – சிபிஐ வழக்கு பதிந்தது.
ஒரே நாளில் மேற்குவங்கம் உள்பட நான்கு மாநிலங்களில் 45 இடங்களில் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் இரண்டு பொது மேலாளர்கள், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உள்பட பலர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. இதில் ருஜிரா – மேனகா சகோதரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட ருஜிராவுக்கு ஹாங்காங் மற்றும் லண்டனில் உள்ள வங்கிக் கணக்குகளில், சந்தேகத்துக்கிடமான பணப்பரிவர்த்தனை செய்யப்படிருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அடிக்கடி கொல்கத்தாவுக்குச் சென்று மம்தாவுக்குச் சவால்விட்டபடி இருக்கிறார்கள். இதற்கிடையே ருஜிராவின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்திவிட்டுத் திரும்பியிருக்கிறது சிபிஐ குழு ஒன்று. மம்தா குடியிருக்கும் பகுதியிலே இருக்கும் அபிஷேக்கின் சாந்தி நிகேதன் இல்லத்தில் 9 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் விசாரிக்கச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்வரை, மம்தாவும் அங்கிருந்தார். (அபிஷேக்கின் குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு) மம்தா அங்கிருந்து சென்ற பின்னரே, சிபிஐ குழுவினர் அங்கு போனார்கள்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் விசாரணை நீடித்தது. எட்டு பக்கத்துக்கு தயார்செய்யப்பட்ட கேள்விகளுக்கு ருஜிராவின் பதில்களை அவர்கள் அப்படியே பதிவுசெய்து கொண்டனர். பெரும்பாலும் தனக்கு எதுவும் தெரியாது என்கிறபடியே அவர் கூறினார் என்றனர் சிபிஐ குழுவினர். முன்னதாக, 21ஆம் தேதியன்று மேனகா கம்பீரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ருஜிராவின் பதில் திருப்தியளிக்கவில்லை என்றே சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் என்றால், பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் நடிகையும் மாடலுமான பாமலா கோஸ்வாமி கடந்த வாரம் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைவிட முக்கியம், பாஜகவின் மாநிலக் குழு உறுப்பினரான ராகேஷ் சிங் அதே வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.. அதாவது, ருஜிராவிடம் விசாரணை நடத்தப்பட்ட அதே நாளில்!
கைது செய்யப்பட்ட முறையும் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது. ராகேஷின் வீட்டுக்குச் சென்ற கொல்கத்தா மாநகரக் காவல்துறையினர், அவருடைய வீட்டில் சல்லடை போடாத குறையாகத் தேடியிருக்கிறார்கள். ஆனால், கைது ஆணையைக்கூட காட்டாமல் தேடுதல் எனும் பெயரில் தங்கள் வீட்டை துவம்சம் செய்துவிட்டதாக ஊடகங்களிடம் சொன்னார், ராகேஷின் மகள். போலீஸாரைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக ராகேஷின் இரண்டு மகன்களையும் அவர்கள் பிடித்துச் சென்றனர். ராகேஷைத் தேடிச்சென்ற ரவுடித் தடுப்புப் படையினரை அவரின் குடும்பத்தினர் வீட்டுக்குள்விட மறுத்தனர். மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் கதவை உடைத்து காவல்துறையினர் உள்ளே புகுந்துள்ளனர்.
பாஜகவின் குடிசைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளரான ராகேஷ் மீது 25 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர் பாஜகவில் சேர்ந்தார். போதைப்பொருள் வழக்கில் கைதான பாமலா, ராகேஷ்தான் தன் காரில் கொக்கைனை வைத்து வழக்கில் சிக்கவைத்து விட்டார் என குற்றம்சாட்டியிருந்தார். பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்களின் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாக்கு நெருக்கமானவர் ராகேஷ் என பாமலா கூறியிருப்பதும் முக்கியத்துவம் கொண்டது.
அபிஷேக்கின் வீட்டுக்குச் சென்று ருஜிராவுக்கு சிபிஐ குழுவினர் விசாரணை அழைப்பாணை தந்தபோதே, அதைப் பற்றி தன் மருமகன் தானாகவே தகவலை வெளியிட்டதை பெருமிதத்தோடு சொன்னார் மம்தா. தன் பாணியிலேயே, துப்பாக்கிகளுக்கு எதிராக சண்டையிட்டு நாங்கள் வருகிறோம்; எலிகளை எதிர்த்து அல்ல என சூடாகவே பதில்கூறினார்.
ராகேஷின் கைதைப் பற்றி பாஜக தரப்பு பெரிய அளவில் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர்.
நீயா, நானா போட்டியானது, தேர்தல் போட்டியில் மட்டும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது!
**- செவ்வியன்**
�,”