சிறப்புக் கட்டுரை: குடும்ப அரசியலில் சற்றும் குறைந்தது அல்ல பாஜக.

politics

பேரா.நா.மணி

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். தமிழ் நாட்டிலும் குடும்ப அரசியலுக்கு பாடம் புகட்டுவோம்” அமித் ஷாவின் சமீபத்திய வருகையில் முன்னுக்கு வந்த முழக்கம் இது.

இப்போது மட்டுமல்ல, இதைவிடவும் நச்சென்ற வார்த்தைகளில் குடும்ப அரசியல் குறித்து அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். “55 ஆண்டுகால குடும்ப அரசியலுக்கு எதிரான 55 மாத ஆட்சி” என்று 2019 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது ஒரு வர்ணணையை மேற்கொண்டார். “குடும்ப ஆட்சிக்கு அப்பாற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் மூன்றே மூன்று. அதில் பாஜகவும் ஒன்று” இப்படியும் அவர் பேசி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கு வர, பாஜக பயன்படுத்திய பேராயுதங்களில் ஒன்று குடும்ப ஆட்சி/ அரசியல். குடும்ப ஆட்சி என்ற பதத்தின் மீது ஒரு கோபத்தை உருவாக்கி, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதிலும் கூட பாஜக பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதில் வெற்றியும் கண்டு வருகிறது. ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்பதைக் காட்டிலும் கொள்கைகளைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை காட்டிலும் “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” போன்ற முழக்கங்களை பயன்படுத்துவதில் பாஜக பெருவிருப்பம் கொண்டிருக்கிறது.

பாஜக குடும்ப ஆட்சி என்ற விமர்சனத்தை வீச்சோடு முன் வைக்கும் போது, அது உண்மையில் குடும்ப ஆட்சிக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தையும் தனக்கு தானே கற்பிதம் செய்து கொள்கிறது. அந்த கற்பிதத்தை நம்ப வைக்கவும் செய்கிறது. மக்கள் உண்மை என்று நம்பி விடும் போது, உற்சாகம் அடைந்து, புதிய கற்பிதங்களையும் உருவாக்கி உலாவிடுகிறது. பாஜகவின் குடும்ப அரசியல் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடுகிறது.

**பாஜக குடும்ப அரசியலுக்கு எதிரான கட்சியா? **

உண்மையில் பாஜக குடும்ப அரசியலுக்கு எதிரான கட்சியா? என்பது முதல் கேள்வி. பாஜக குடும்ப ஆட்சி நடத்துகிறதா இல்லையா என்பது இரண்டாவது கேள்வி. இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அதிர்ச்சி ஊட்டக் கூடியவை. குடும்ப ஆட்சியில் காங்கிரஸுக்கு சற்றும் சளைத்ததல்ல பாஜக என்பதே அதற்கான பதில்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் கண்கன் சந்திரா என்பவர் இது குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஒரு நூலையும் எழுதியுள்ளார். “ஜனநாயக வம்சாவளிகள்: தற்கால இந்திய அரசியல் கட்சிகளும் அதில் குடும்ப ஆதிக்கமும்” என்பது அந்த நூலின் பெயர்.

இந்த ஆய்வாளர், குடும்ப அரசியல் என்பதை, அப்பா, அம்மா, கணவன் அல்லது மனைவி வழியாக மக்களவை உறுப்பினர்களாக வந்தவர்களை மட்டுமே என்று வரையறை செய்து கொள்கிறார். இதுதவிர அண்ணன், தம்பி, சித்தப்பா,பெரியப்பா, மாமன், மச்சான் வழியாக மக்களவைக்கு வந்தவர்களை அது கணக்கில் கொள்ளவில்லை. அப்படியென்றால், உண்மையான குடும்ப ஆட்சி என்பது இன்னும் விரிவானது. இந்த ஆய்வாளரின் வரையறைப்படி, குடும்ப அரசியல் என்பது கொஞ்சம் சுருங்கியது. மேற்படி இந்த ஆய்வாளர், குடும்ப ஆட்சி என்பதை முற்றிலும் தவறானது என்ற முடிவுக்கும் வரவில்லை. குடும்ப அரசியல் காரணம் என்ன? அது உலகளாவிய அளவில், ஜனநாயக நாடுகளில் எப்படி இருக்கிறது? குடும்ப அரசியல் தவிர்க்க முடியாததா அது ஏன்? இந்திய சாதீய கட்டமைப்புக்கும் குடும்ப ஆட்சிக்கும் உள்ள உறவு என்ன? சாதீய கட்டமைப்பு வலுவாக உள்ள இந்திய மாநிலங்களில் அது எப்படி இருக்கிறது என்று அது விரிவாக ஆய்வு செய்கிறது. குடும்ப அரசியல் எப்போது நீர்த்துப் போகும்? இப்படி பல விசயங்களை இந்த ஆய்வு ஆராய்கிறது.

**ஆய்வு சொல்லும் உண்மை**

இதில், “பாஜக குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டதா? பாஜகவின் குடும்ப அரசியலின் பரிமாணம் என்ன?‌குடும்ப அரசியலில் காங்கிரஸிற்கு சற்றும் குறைந்ததா பாஜக?” என்பதை மட்டுமே இந்த கட்டுரையில் பரிசீலனை செய்வோம்.

13,14,15 மற்றும் 16 ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்களின் குடும்ப பின்னணியை ஆராய்ந்து கீழ் காணும் முடிவுகளுக்கு வருகிறார்கள். 1999 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட, 13 வது மக்களவையில், குடும்ப அரசியல் வழியாக காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினராக வந்தவர்கள் 8 விழுக்காடு. பாஜகவில் இது 10 விழுக்காடு. அதாவது இரண்டு விழுக்காடு வேறுபாடு மட்டுமே. அதேசமயம், 14வது மக்களவையில், குடும்ப அரசியல் வழியாக எம்.பி ஆனவர்கள் காங்கிரஸ் கட்சியில் 10 விழுக்காடு. பாஜகவில் இது இரண்டு மடங்கு. அதாவது 20 விழுக்காடு‌. ஆனால் 15வது மக்களவையில், காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் வழி மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 24 விழுக்காடு. ஆனால் பாஜகவில் இது 10 விழுக்காடு. 16வது மக்களவையில், குடும்ப அரசியல் வழி மக்களவை உறுப்பினர்கள் விசயத்தில், பாஜக காங்கிரஸை மீண்டும் பின்னுக்கு தள்ளியது. குடும்ப அரசியல் வழி மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை பாஜகவில் 20 விழுக்காடாக அதிகரித்தது. காங்கிரஸில் இது 8 விழுக்காடாக குறைந்துவிட்டது.

ஜனசங்கம் என்ற பெயரில் இதற்கு முன்னர் பாஜக இயங்கி வந்தபோதும், 1980 ஆம் ஆண்டில் தான், பாஜக என்ற பெயரில், தற்போதைய வடிவம் எடுத்தது. 1984 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் பொதுத் தேர்தலில் களம் இறங்கியது. அத்தேர்தலில் இரண்டு இடங்களை பெற்றது பாஜக. 1980 ல் தொடங்கப்பட்ட பாஜக, 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே ஆட்சி பிடித்த காங்கிரஸ் கட்சியோடு போட்டி போட்டுக் கொண்டு குடும்ப அரசியலையும் ஆட்சியையும் நடத்துகிறது என்றால் எந்தக் கட்சி, குடும்ப அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

சராசரி இந்திய குடிமக்களைக் காட்டிலும் அரசியலுக்கு வந்து விட்ட இந்திய குடிமகனுக்கு சட்ட மன்ற உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர் ஆவதற்கு 110 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாக அவரது ஆய்வு கூறுகிறது. இதன் படி பார்த்தால்,1952 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியை காட்டிலும், 1980 ஆம் ஆண்டில் உருவெடுத்த அரசியல் கட்சியான பாஜகவே தீவிர குடும்ப அரசியல் நடத்துகிறது என்று ஆதாரப்பூர்வமாக கூற முடியும்.

காங்கிரஸை காட்டிலும் பாஜகவே தீவிர குடும்ப அரசியல் நடத்தும் கட்சி என்பதற்கு இன்னொரு முக்கியமான ஆதாரத்தையும் சுட்டிக் காட்ட முடியும். சற்றேறக்குறைய ஏழு விழுக்காடு மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள உத்திரபிரதேச மாநிலத்தில், குடும்ப அரசியல் செய்து வரும் குடும்பங்கள் மொத்தம் 51. அதில் பாஜகவை சார்ந்தவர்கள் மட்டுமே 17 பேர். காங்கிரஸை சேர்ந்தவர்கள் 15 பேர். மீதமுள்ளவர்கள் இதர மாநில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். குடும்ப அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி ஞாபகத்திற்கு வந்தால், அத்தோடு சேர்த்து பாஜகவையும் நினைவில் கொள்வதே அறிவியல் பூர்வமானது. இதுபற்றி கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர், முதலில் 29/03/2019 அன்று Indiaspend.com இணையத்திலும், அதன் பின்னர் scroll.in இதழிலும் வெளியிட்ட “BJP no less dynastic than Congress Lok Sabha என்ற கட்டுரையை வாசிக்கலாம்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

பேராசிரியர் நா. மணி,பொருளாதாரப் பேராசிரியர். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, “பணமதிப்பு நீக்கம் ஏன் எப்படி எதற்கு?” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *