அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள் என்ன?

politics

தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 முறை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 29) காலை ஆலோசனை நடத்தினார். பின்னர், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழு தலைவர், இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் மற்றும் அரசு மருத்துவக்குழு நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

* அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

* அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

**பள்ளி அரசாணை நிறுத்திவைப்பு**

* 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

**எதற்கெல்லாம் தடை**

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

மேலும் முதல்வரின் அறிவிப்பில், “ கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த் தொற்று வேகம் மாநில அளவில் குறைந்துள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தவர்,

“திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *