<சீமானுக்கு என்ன ஆச்சு?

politics

மேடைகளில் உணர்ச்சி தெறிக்க நரம்பு புடைக்க வியர்வை வழிய ஆவேசமாக பேசுவதற்கு அடையாளமாகவே மாறிப் போனவர் சீமான்.

அப்படிப்பட்ட சீமான் இன்று ஏப்ரல் 2ஆம் தேதி திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே பதில்களை நிறுத்திவிட்டு சில நொடிகள் நிற்க… திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.

என்னாச்சோ ஏதாச்சோ என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பொதுமக்களும் பதறிப் போனார்கள்.

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இன்று 2-வது நாளாக வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்கள் உடன் அதிகாரிகள் வர தகவல் கிடைத்து சீமான் இன்று காலை அங்கே விரைந்தார்.

அந்தப் பிரச்சினை பற்றி அண்ணாமலை நகர் பொதுமக்களுடன் சுமார் 35 நிமிடங்கள் வெயிலில் நின்றபடியே உரையாடினார் சீமான். அரசு அதிகாரிகள் தங்களை எப்படியெல்லாம் வீடுகளை காலி செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள் என்றும், கட்டாயப் படுத்துகிறார்கள் என்றும் சீமானிடம் ஆவணங்களை காட்டி அப்பகுதி மக்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொதுமக்களை சந்தித்து விட்டு அப்படியே பத்திரிக்கையாளர்களை சந்திக்கவும் சீமான் தயாரானார். 35 நிமிடங்கள் மக்களிடம் உரையாடி விட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கம்போல உற்சாகமாகவும் தனக்கே உரிய சிரிப்பு சத்தத்தோடும் செய்தியாளர்களிடம் பதிலளித்துக் கொண்டிருந்தார் சீமான்.நேர் வெயிலாக சீமானின் முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

பெட்ரோல் டீசல் விலையேற்றம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சீமான், ‘இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென பேச்சை நிறுத்தினார். அருகில் நின்ற நிர்வாகிகளிடம் போதும் என்று கூறினார். தனது சட்டையில் மாட்டப்பட்டிருந்த மைக்கை கழற்ற முயன்ற சீமான் அப்படியே திடீரென சரிந்து விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ந்து போன செய்தியாளர்கள் அப்படியே அவரை சூழ்ந்து கொள்ள, விஷயமறிந்த அண்ணாமலை நகர் மக்களும் நமக்காகப் போராட வந்த சீமானுக்கு என்ன ஆச்சு என்ற பதற்றத்தில் அவரை சூழ்ந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடனடியாக 108க்கு போன் செய்ய சில நிமிடங்களில் சீமான் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே முதலுதவி சிகிச்சை எடுத்த பிறகு சீமான் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகருக்குச் சொந்தமான ஜோஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் சீமான்.

வார்த்தைகளில் காட்டும் வலிமையைப் போலவே சீமான் உடல் ரீதியாகவும் வலிமையானவர்தான். அவர் உதவி இயக்குனராக இருந்த காலகட்டங்களிலும் சரி, இயக்குனர் ஆகிவிட்ட காலகட்டங்களிலும் சரி… இரவு எத்தனை மணிக்கு தூங்கப் போனாலும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காசிமேடு கடற்கரையில் இருப்பார்.

அங்கே சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டப் பயிற்சி எடுப்பது அவருக்கு தினம் தினம் பழகிப்போன ஒன்று. பல வருடங்கள் நீடித்த இந்த ஓட்டப்பயிற்சி அவர் நாம் தமிழர் இயக்கம் கட்சி என்று ஆனதும் மெல்லமெல்ல குறைந்தது.

சென்னையில் இருக்கும் நாட்களை விட வெளியூர்களில் வெளி மாவட்டங்களில் இருக்கும் நாட்களே அதிகமானதால் தொடர்ந்து ஓட்டப் பயிற்சி எடுக்கமுடியாமல் போனது. அதற்கு பதிலாக உடற்பயிற்சிக் கூடங்களில் சென்று பயிற்சி செய்து வந்தார்.

“காலை பத்து கிலோமீட்டர் ஓடிய பிறகும் கூட அவர் காலை உணவு எடுத்துக்கொள்ள மாட்டார். ஏதாவது பழச்சாறு, இளநீர் அருந்துவதோடு அவரது காலை சாப்பாடு முடிந்து விடும். மதிய உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார். இன்றும் காலையில் சாப்பிடாமல் திருவொற்றியூர் பகுதிக்கு வந்துவிட்டார். அங்கே முகத்துக்கு நேராக வெயில் அடிக்க செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போதுதான் திடீரென சோர்வு ஏற்பட்டு அப்படியே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவர்கள் சீமானிடம் உடல் நலனில் அக்கறை செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெயிலில் அலையாமல் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *