உத்தவ் தாக்ரே ராஜினாமா!

politics

மகாராஷ்டிரா முதல்வராக இருந்த சிவசேனாவைச் சேர்ந்த உத்தவ் தாக்ரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஏற்றுக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்டது. அதோடு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது சிவசேனா.
இந்தச் சூழலில், கடந்த 20ஆம் தேதி சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் இரவோடு இரவாகக் குஜராத் சென்று அங்கிருந்து பின்னர் அசாம் மாநிலம் சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கினார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக செயல்பட முடிவெடுத்தனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் சேர்ந்து கொண்டனர்.
இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில ஆளுநரைச் சந்தித்து, சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்ரேவுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என்று தெரிவித்தது
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் உத்தவ் தாக்ரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்தக் கடிதத்தை ஆளுநரும் ஏற்றுள்ளார்.
அதேபோன்று ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, இதுநாள் வரை தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தனது சொந்த கட்சி எம்.எல்.ஏக்களே தன்னை கைவிட்டு விட்டதாக உருக்கமாகப் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஜூலை 1ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *