பூஞ்சை தொற்று :தீவிர சிகிச்சையில் சோனியா காந்தி

politics

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி இன்று (ஜூன் 17) தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடந்த ஜூன் 1ஆம் தேதி மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். வீட்டுத் தனிமையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில் சோனியா காந்தி ஜூன் 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தியை விசாரணைக்கு மத்தியிலும் நேரில் சென்று பார்த்து வந்தார் ராகுல் காந்தி. இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் மீண்டும் அனுப்பியிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராஜீவ்காந்தி அமலாக்கத் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று அமலாக்கத் துறை திங்கள் கிழமை வரை அவகாசம் வழங்கியது.

நேற்று இரவு முழுவதும் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி இருந்ததாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சோனியா காந்தி உடல்நிலை தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிடாத காங்கிரஸ் கட்சி இன்று விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “காங்கிரஸ் தலைவர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 12 ஆம் தேதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து மூக்கிலிருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சோனியா காந்தியின் கீழ் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சையில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் உடல் நிலை குறித்த செய்தி காங்கிரஸ் கட்சியினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *