ஒற்றைத் தலைமை என்பது ஜெ.வுக்கு செய்யும் துரோகம்: வெடித்த ஓபிஎஸ்

politics

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிராக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக வெடித்திருக்கிறார்.  ஜூன் 14ஆம் தேதி  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி மாசெக்கள் பலர் பேசிய நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
மூன்று நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் தனது கிரீன்வேஸ் சாலை சாலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேல் திடீரென செய்தியாளர்களை வரச் சொன்னார்.  துணை ஒருங்கிணைப்பாளர்  வைத்திலிங்கம், மாநிலங்களவை எம்.பி தருமர்,  மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரோடு செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கினார் ஓபிஎஸ்.
“ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் நானும், எடப்பாடி பழனிசாமியும் இணையும்போது, ‘பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து தர வேண்டும். அவருக்கு பிறகு யாரும் இருக்கக் கூடாது. நிரந்தர பொதுச்செயலாளர் என்று வாய்நிறைய அழைத்த அந்த பதவியை யாருக்கும் தரக் கூடாது’ என்று சிந்தாந்தத்தின் அடிப்படையில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. 
இரட்டை தலைமை என்பது முதலில் பதவிகளில் மட்டும்தான் என்றார்கள். சரி என  ஒப்புக்கொண்டேன். 2 நாட்கள் கழித்து கட்சி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளில் இருவருமே கையெழுத்து போட வேண்டும் என்றார்கள். கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று தொண்டர்கள் அனைவருமே விரும்பினார்கள். எனவே காலத்தின் கட்டாயம் கருதியும், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அதை ஏற்றுக்கொண்டேன். இந்த ஆறு ஆண்டுக் காலம் இருவருமே இணைந்து பணியாற்றினோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், நான் துணை முதலமைச்சராகவும் பணியாற்றினேன். துணை முதலமைச்சர் பதவிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை. ஆனாலும் கட்சி நலனுக்காக அதை ஏற்றுக்கொண்டேன். பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்து கேட்டுக்கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு… இந்த ஒற்றை தலைமை விவகாரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. இது கனவா, நனவா என்பது தெரியவில்லை. என்னிடம் கலந்து பேசவில்லை பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடமில்லை என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் அதை விளக்குவதற்காகதான் அன்று அ.தி.மு.க. கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் வரவேற்புரை கே.பி.முனுசாமி ஆற்றினார். எடப்பாடி பழனிசாமியும், நானும் விளக்கி பேசினோம். கூட்டம் நன்றியுரையோடு முடிகின்ற நேரத்தில் சிலர் கருத்து சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி நிரல் குறித்து ஒருங்கிணைப்பாளராக என்னிடம் கலந்து பேசவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களிடமும் கலந்து பேசவில்லை” என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஒரு அறையில் கலந்து பேச வேண்டிய நிகழ்வு இது. இதை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியிருந்தாலும், வெளியில் யாரிடமும் பேட்டியாகச் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியில் போய் சொன்னதால், இந்த விஷயம் மிகப்பெரிய பூதாகரமான செய்தியாக வெளியில் சென்று கொண்டிருக்கிறது. நன்றாக ஆறு ஆண்டுக் காலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஒற்றை தலைமை என்ற ஒரு கருத்தை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இது தேவைதானா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான் இன்று பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும் தங்களுடைய பல்வேறு நிலைகளை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதனால் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். அமைதி காக்க வேண்டும்”  என்று பேசி முடித்தார்.
அதைத் தொடர்ந்து  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் பன்னீர்செல்வம்.
**இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?** 
“இப்போது இரட்டை தலைமை நன்றாக போய் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஒற்றை தலைமையாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தார். அந்த பதவி அவருக்கு மட்டும் உரித்தானது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் இந்த பொதுச் செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று சொன்னால் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கொடுத்த மிகுந்த மதிப்பு, மரியாதை காலாவதியாகிய சூழல் உருவாகும். இது அவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகத்தான் நான் நினைக்கிறேன்.”
**நீங்களும், எடப்பாடி பழனிசாமியும்  இந்த பிரச்சினை தொடர்பாக பேசி சமரசம் ஆக முயற்சிப்பீர்களா?**
“பேசலாம். எங்களுக்குள் ‘ஈகோ’ எதுவும் கிடையாது. எத்தனையோ பிரச்சினைக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். நான் கருத்து சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க. எந்த நிலையிலும் பிளவுபட்டு விடக் கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு” என்று கூறினார் ஓபிஎஸ்.

-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *