ராகுல் கோரிக்கையை ஏற்ற அமலாக்கத் துறை!

politics

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பண பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை ராகுல் காந்தியிடம் கடந்த 13ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறையின் செயல்பாட்டைக் கண்டித்தும் பாஜக அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகத்திலும் மூன்று நாட்களாகப் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னை சின்னமலை அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, ரூபி மனோகரன் எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஒருசில காங்கிரஸ் நிர்வாகிகள் வேகமாக சென்று ஆளுநர் மாளிகை வாசல் முன்புள்ள சாலை பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சின்னமலை பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழியிலும் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று நாடு தழுவிய அளவில் நேற்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மும்பை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி ஆளுநர் மாளிகை என நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது தாய் சோனியா காந்தியுடன் இருக்க விரும்புவதால் இன்று விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி அமலாக்கத் துறைக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார். ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று ராகுல்காந்திக்கு மூன்று நாள் அமலாக்கத்துறை கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதனிடையே காங்கிரஸ் எம்பிகளை காவல்துறை தாக்கியதாகவும், இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை காங்கிரஸ் எம்பிக்கள் சந்தித்து மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *