வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 1) ஆலோசனை நடத்தினார்.
இதில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட 9 கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், தேர்தல் செலவு கணக்குகளை முறையாகக் கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை தேர்தல் அதிகாரி வழங்கியுள்ளார்.
இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கண்டுபிடிக்கப்பட்ட 550 கோடி ரூபாய் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும் நிலையிலும் இதுவரை முடிவு தெரியவரவில்லை. ஆர் கே நகரில் நடைபெற்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 89 கோடி ரூபாய் குறித்த விவகாரத்திலும் இதுவரை எந்த முடிவும் வெளிவரவில்லை. எனவே ஏதோ கூட்டத்தைக் கூட்டி கருத்துக்களைக் கேட்பதைக் காட்டிலும், இது போன்ற தவறுகள் இந்த தேர்தலில் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் முன் தேதியிட்டு மாற்றப்பட்டு வருகிறார்கள் அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விவகாரம் எல்லா வகையிலும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் தபால் வாக்கை பயன்படுத்தியதால் தான் பீகாரில் ஆட்சியைப் பிடித்தார்கள். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணப்பட்ட விவகார வழக்கு நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருக்கிறது. எனவே தபால் ஓட்டில் எல்லாவிதமான, தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே தபால் ஓட்டுகளால் ஏற்படும் குளறுபடிகளை நீக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.
கடந்த 26ஆம் தேதி 4.30 மணிக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு வருகிறது. அதற்கு முன்பாக, 4 மணிக்குக் கொடுத்த அறிவிப்புகளை எல்லாம் எப்படி அமல்படுத்த முடியும். இதற்கு ஆளுநரும் கூட ஒப்புதல் அளித்திருக்கிறார். தேர்தல் விதிமுறை வந்தபிறகு ஆளுநர் கையொப்பம் இடுகிறார் என்றால், அரசியல் சட்டத்தில் இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குரிய நடவடிக்கையைத் தேர்தல் ஆணையமும் எடுக்க வேண்டும்.
தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே, சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத கால அவகாசம் தேவையற்றது. வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதும் கண்காணிப்பதும் கடினம். மேலும் ஒரே இடத்தில் வைத்து வாக்கு எண்ணுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூடவும் நேரிடும் என்று தெரிவித்தார்.
**-பிரியா**�,”