இறைவனை மீறி எதுவும் நடக்காது: அமெரிக்கா புறப்பட்ட டி.ராஜேந்தர்

politics

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டி ராஜேந்தர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னாள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

நடிகர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஹார்ட்டில் பிளாக் இருப்பதுடன் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் இருக்கும் மருத்துவ வசதிகளை விட அமெரிக்காவில் கூடுதல் வசதி இருக்கும் என்பதால் இரு நோய்க்கும் சிகிச்சை அளிக்க டி ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் தன்னம்பிக்கைக்குப் பெயர் போன டி.ராஜேந்தர், தனக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் ஜாதகத்தையும் தன்னுடைய ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஜோதிடம் பார்த்து, ‘எனக்குக் கட்டம் நல்லா இருக்கிறது, பயப்படாதீர்கள்’ என்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதே சமயத்தில் அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான நடைமுறைகளை மகன் சிம்பு கவனித்து வந்தார்.

அதற்கான வேலைகள் நிறைவடைந்த நிலையில் இன்று டி.ராஜேந்தர் தனது மனைவி உள்ளிட்டோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.

அதற்கு முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“நான் இன்று இங்கு நிற்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் தான் காரணம். என்னுடைய தன்னம்பிக்கையை மீறிய கடவுள் நம்பிக்கைதான் காரணம். அந்த முருகன் அருளால் பேசிக் கொண்டிருக்கிறேன். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா போகிறேன்” என்று கூறினார்.

நான் முகத்தில் வைத்திருக்கிறேன் தாடி, ஆனால் என் மனதை வைத்ததில்லை மூடி என்று தனக்கே உரிய பாசையில் பேசியே டி ராஜேந்தர், “நான் இன்னும் அமெரிக்கா செல்லவில்லை. இப்போதுதான் விமானநிலையம் வந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்கனவே சென்றுவிட்டதாக என்னைப்பற்றிக் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி விட்டார்கள். யார் என்ன செய்தாலும் இறைவனை மீறி விதியை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சாதாரண நபர். எனக்காகப் பல பேர் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். அதனால் தான் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது கட்சிக்காரர்கள் மற்றும் எனது அபிமானிகள், எனது ரசிகர்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது அன்பும், பாசமும் காட்டக் கூடிய ஒரே தலைவர் கலைஞர் தான். அவருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டுவார் என நினைக்கவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் நலம் விசாரித்தனர். எனது குடும்பமே என்னுடன் இருக்கிறது. ஆனால் தென்னகத்து மக்கள், என் ஈழத்து மக்கள் என் மீது காட்டிய அன்பு உள்ள வரை எந்த வதந்தியும் நம்பாதீர்கள்.

நான் நன்றாக இருக்கிறேன். போய்விட்டு வந்து பேசுகிறேன். சிம்பு தான் நான் வெளிநாடு போக காரணம். வெளிநாட்டில் தான் உங்களுக்கு உயர் சிகிச்சை கொடுப்பேன் என்று ஒத்த காலில் நின்றார். படப்பிடிப்பு வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு இன்று அமெரிக்கா சென்று எனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். சில பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் இந்த காலத்தில் சிம்புவை மகனாகப் பெற்றதற்கு நான் பெருமைப் படுகிறேன்” என்று கூறினார்.

முன்னதாக, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை டி.ராஜேந்தரை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது டி.ராஜேந்தர் மகன் குறளரசன் உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *