|பன்னீரால் ரூ.500 கோடி இழப்பு : திமுக பகீர் புகார்!

Published On:

| By Balaji

அரசுக்கு சொந்தமான நிலத்தைப் பாதி விலைக்கு விற்றதால் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை அவசரச் சட்டம் மூலம் முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவர்களுக்கு விற்றதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த முறைகேடு தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ஆர்.எஸ்.பாரதி நேற்று (நவம்பர் 17) லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோயம்பேடு அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, அரசுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் வகையில் விற்பனை செய்ய அதிமுக அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டது.

சட்டப்படி இந்த இடத்தை தனியாருக்கு விற்கக் கூடாது. மருத்துவமனை ,கல்லூரி, பள்ளி கட்டுமானத்திற்கு வேண்டுமானால் தனியாருக்கு வழங்கலாம்.

ஆனால் இந்த இடத்தை பாஷ்யம் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு சந்திப்பு அருகே உள்ள இந்த இடத்தை சதுர அடி 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் தற்போது சதுர அடி 25,000 ரூபாய் மார்க்கெட் மதிப்பாக உள்ளது.

பன்னீர்செல்வத்தின் பிள்ளைகள் பங்குதாரராக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் பாஷ்யம் நிறுவனம். குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலம் விற்பனை செய்வதற்கு துறையின் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் காரணமாக இருந்துள்ளார். இந்த நிலத்தை விற்பனை செய்ய ஒரே வாரத்தில் சிஎம்டிஏ அப்ரூவல் கிடைத்துள்ளது.

எனவே இந்த முறைகேடு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் லஞ்சம் ஒழிப்புத் துறையில் வழங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share