வங்காள விரிகுடா கடலில் உருவான யாஸ் புயல், மே 26 ஆம் தேதி ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது ஏற்பட்ட புயல் காற்று, மழையால் ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்தப் புயலுக்குப் பிறகான மோடி-மம்தா மோதலால் யாஸ் புயலை மிஞ்சும் அளவுக்கு அரசியல் புயல் மேற்கு வங்காள மாநிலத்தில் வீசிக் கொண்டிருக்கிறது.
மே 28 ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். இரு மாநிலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார்.
மேற்கு வங்காள மாநிலம் காலிகுண்டா விமானப் படை தளத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்துக்கு புயல் சேத நிவாரணமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்”என்று கோரிக்கை மனு அளித்தார். ஆனால் அதன் பிறகுதான் அரசியல் புயல் வீச ஆரம்பித்தது.
பிரதமர் மோடியை சந்தித்த மம்தா, அதன் பின் நேற்று பிற்பகல் பிரதமர் தலைமையில் நடந்த புயல் சேத ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் அமைப்பையும் கூட்டாட்சியையும் பிரதமரையும் அவமதிக்கும் செயல் என்று மேற்கு வங்காள ஆளுநரும், பாஜக தலைவர் நட்டாவும் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் மம்தா பானர்ஜியோ, “பிரதமர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது எனக்குத் தெரியாது.நான் டிகா மாவட்டத்தில் ஆய்வுக்கு சென்றுவிட்டேன்”என்று கூறியிருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி மீது பாஜக கடுமையான தாக்குதலை நடத்தியது. திருணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி மிகப் பெரும்பான்மை பெற்று மேற்கு வங்காளத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனாலும் அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவினார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மேற்கு வங்காளத்தில் நடந்த கலவரங்களில் பாஜக நிர்வாகிகள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.
இவ்வாறு மம்தா-மோடி இடையே அதிகார அரசியல் மோதல் தொடர்ந்த நிலையில்தான் பிரதமர் மோடி, நடத்திய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தார் முதல்வர் மம்தா.
இதை மோடியும் சும்மா விடுவதாக இல்லை. நேற்று பிற்பகல் மம்தா ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடியை தலைவராகக் கொண்ட மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஓர் உத்தரவை வெளியிட்டது.
“ மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யா அப்பதவியில் இருந்து மாற்றப்படுகிறார். அவர் மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் நார்த் பிளாக்கில்
ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ”என்பதுதான் அந்த உத்தரவு.
தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யா வெள்ளிக்கிழமை மாலை முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.
மேற்கு வங்காள தலைமைச் செயலாளர் வரும் மே 31 அன்று ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அவரது அனுபவம், கொரோனா பணி நிர்வாகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரை மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு செய்ய மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கேட்டிருந்தார். அதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததாகவே தகவல்கள் போன வாரம் வரை வந்தன. ஆனால் மம்தா பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில் மம்தாவின் மீதான கோபத்தைக் காட்டுவதற்காக தலைமைச் செயலாளர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை. இதன் மூலம் சமீபத்திய தேர்தலில் தனக்கு ஏற்பட்ட அவமானகரமான இழப்பை ஈடுகட்ட பாஜக முயல்கிறது. சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓய்வுபெறுவதற்கு முன்னர் தலைமைச் செயலாளர் திரும்ப அழைக்கப்படுகிறார். பாஜகவின் மேற்கு வங்காளம் மீதான விரோதப் போக்கை இது நிரூபிக்கிறது ” என்கிறார்.
மம்தா -மோடியின் மோதல் மேற்கு வங்காள அரசுக்கும், மத்திய அரசுக்குமான மோதலாக விரிவடைந்துகொண்டே இருக்கிறது.
**-வேந்தன்**�,