மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்துக்கு மீண்டும் அடிக்கல்: அழகிரி விமர்சனம்!

politics

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நேற்று நடைபெற்ற அரசு விழாவில், ரூபாய் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டத்துக்குப் பிரதமர் மோடி மீண்டும் அடிக்கல் நாட்டியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பு ரூபாய் 5852 கோடி செலவில் 21 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதே திட்டம் ரூபாய் 1655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைத்திட அன்றைய முதலமைச்சர்; டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னிலையில், அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கால் 8.1.2009 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1655 கோடியில் ரூபாய் 700 கோடி செலவு செய்து 30 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், 2011 இல் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொருந்தாத, நியாயமற்ற காரணங்களைக் கூறி திட்டத்தை முடக்கியதை எவரும் மறந்திட இயலாது. இது சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழக அரசின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து, அ.தி.மு.க. ஆட்சி ஏற்படுத்திய தடைகளால் திட்டம் நிலுவையிலிருந்தது. அன்று ரூபாய் 1655 கோடியில் நிறைவு பெற வேண்டிய திட்டத்திற்கு இன்று ரூபாய் 5852 கோடி செலவில் பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். ஏற்கனவே மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களும், அடிக்கல் நாட்டிய திட்டங்களும் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையிலிருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். குறிப்பாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், மதுரை – தேனி ரயில் வழித்தடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், சென்னை – பெங்களூர் விரைவு வழிச்சாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவின் முயற்சியால் இந்த திட்டத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எந்தெந்த திட்டங்களெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த திட்டங்களையெல்லாம் முடக்குகிற நடவடிக்கைள் நடந்து வந்ததை எவரும் மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களுக்குத் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதைப் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார்.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.2 சதவிகிதம் மட்டுமே என்று பிரதமர் மோடியின் முகத்திற்கு நேராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது அவரது அரசியல் பேராண்மையையும், துணிவையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையினால், நிதி நெருக்கடிகளுக்கிடையே தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றி வருகிற பணிகளை முதலமைச்சர் பட்டியலிட்டுக் காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ் மொழியைப் பிரபலப்படுத்த கடும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வதாகப் பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகும். மேலும், செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், நடைமுறையில் இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு வழங்கப்படுகிற முன்னுரிமை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த மூன்றாண்டுகளில், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூபாய் 643.84 கோடி நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கியிருக்கிறது. 2011 மக்கள் தொகையின்படி, 24,821 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு, மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 29 கோடி. இத்தகைய அப்பட்டமான பாரபட்சத்தைக் காட்டிவிட்டு பிரதமர் மோடி பேசும் போது, மகாகவி பாரதியார் பாடலை மேற்கோள் காட்டுவதும், ‘வணக்கம்’ என்று கூறுவதும் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பிரதமர் மோடியின் அரசியல் என்பது கூட்டுறவு கூட்டாட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தி மொழியைத் திணிப்பதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. மாநில மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டு, இந்தியாவின் அலுவல் மொழியான ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தியை மட்டுமே நடைமுறைக்குக் கொண்டு வருவது தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கூட்டுத் திட்டமாகும். முன்னாள் பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழியையும், அதன்மூலம் வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பையும் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மொழி உரிமைகளைப் பாதுகாக்க ஓரணியில் திரண்டு பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை முறியடிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *