மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவினர் வேட்புமனு தாக்கல்!

politics

மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாடு முழுவதும் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாட்களில் நிறைவடைகிறது.

தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என் ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷ்ணன், ஏ. விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எம்எல்ஏக்கள் ஆதரவின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படலாம். அதிமுக சார்பில் 2 பேர் தேர்ந்தெடுக்கப்படலாம். இதில் திமுக சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளரும், தலைவருமான தர்மர் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்தது.

திமுக சார்பில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா. கிரிராஜன், சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இவர்கள் 3 பேரும் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *