ராஜீவ் முக்கியமா? ராஜ்யசபா முக்கியமா? காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி!

politics

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று மே 18 விடுதலை செய்தது.
இந்த விவகாரம் தேசிய அளவில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் வரவேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தியது.

மேலும் பாரதிய ஜனதா அரசின் பிரதமர் மோடி பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலையைக் கடைபிடிக்கிறார் என்றும் இந்த தீர்ப்பு பற்றிய மௌனம் காக்கிறார் என்றும் நேற்று காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இன்று மே 19ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் இந்த தீர்ப்புக்குப் பிறகு காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தின் படி விடுதலை செய்திருக்கிறது. இந்த தீர்பீபில் எந்த இடத்திலும் பேரறிவாளன் நிரபராதி என்று குறிப்பிடப்படவில்லை. அவர் குற்றவாளிதான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்றிலிருந்து தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தான் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்திற்கு நேர்மையாக நடப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்ற அண்ணாமலை,

“காங்கிரஸ் கட்சி ஒரு ஆளுமையான கட்சி என்றால் திமுக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். சித்தாந்த ரீதியாக இந்த சூழ்நிலையை விட காங்கிரஸ் கட்சிக்கு சவாலான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது. இன்று இந்த பிரச்சனையில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு போராட்டம் என்றும் நாளை திமுக கொடுக்கக்கூடிய ராஜ்யசபா சீட்டுக்காக இங்கே போய் நிற்போம் என்றால் தமிழக மக்களை நீங்கள் முட்டாள்கள் என கருதுகிறீர்கள்” என்று விமர்சித்திருக்கிறார் அண்ணாமலை.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *