இலங்கையின் அடுத்த பிரதமர் யார்?: அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சிகள்!

politics

தீவு நாடான இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் போராட்டம் காரணமாகப் பதவி விலகினார். இதனால் இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்க அடுத்த இடைக்கால பிரதமராக வரலாம் எனக் கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சியான சமகி ஜன பலவெகய தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்கவும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பதற்றமான சூழல் நிலவி வரும் இலங்கைக்கு இந்த வாரத்தில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பிரதமர் நியமனம் செய்யப்படுவார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். 255 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறக் கூடிய மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய பிரதமரையும், அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அதுபோன்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்கே, “இன்னும் இரண்டு நாட்களில் புதிய பிரதமரை நியமிக்காவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்துவிடும். அரசியல் கட்சிகள் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் இரண்டு வாரங்களில் நான் பதவியிலிருந்து விலகுவேன்” என்று கூறியுள்ளார்.

இந்தச்சூழலில் எதிர்க்கட்சியான சமகி ஜன பலவெகய (எஸ்ஜேபி) தலைவர் சஜித் பிரேமதாச அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) பாராளுமன்றத்தின் மூலம் அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும் இந்த இரு கட்சியினரும், அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினால் பிரதமராகப் பதவி ஏற்கத் தயாராக இருப்பதாக நிபந்தனை விதித்துள்ளனர்.

எஸ்ஜேபி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கூறுகையில், “நேற்று நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நியமன விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிபர் பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராகப் பொறுப்பேற்கச் சம்மதம் தெரிவித்தார்” என்று கூறினார்.

எஸ்ஜேபி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில், “இன்று பிரதமர் பதவி பொம்மை போல் உள்ளது. பாராளுமன்றம் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு நிறுவனம் போல் உள்ளது. பிரேமதாச கைப்பாவையாக இருக்கத் தயாராக இல்லை. புதிய தொடக்கத்தைப் பெறுவதற்கு, அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார். தற்போதைய அதிபருக்கு உள்நாட்டிலோ அல்லது சர்வதேச அளவிலோ அங்கீகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர கூறுகையில், பிரேமதாச எதிர்காலத்தில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “குறிப்பாக தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயல்படும் 11 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, அதிபர் பதவி விலகும்வரை பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று கூறுவதை விடுத்து இந்த நேரத்தில் முன்னின்று செயல்பட வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண்பதே எங்களின் இலக்கு” என்றும் கூறியுள்ளார்.

அதேசமயத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை தேசிய மக்கள் சக்தி (என்பிபி) இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்பேற்கத் தயார் என ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியையும், அராஜகத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க என்பிபி தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தற்காலிக அதிபராகச் செயற்பட வேண்டும் என்று என்பிபி வலியுறுத்தியுள்ளது.

அதிபரை எதிர்க்கட்சிகள் பதவி விலகுமாறு வலியுறுத்தும் நிலையில், கோத்தபய ராஜபக்ச குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாகவும், அதிபரின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் பதவியை ஏற்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இலங்கை அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் அவரை ஆதரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் என்றும் இதன்மூலம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்கலாம் என்றும் கூறப்படுகிறது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *