இலங்கைக்குப் படைகளா? இந்தியா பதில்!

politics

இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையை கையாளுவதற்கு இந்தியா தனது படைகளை அனுப்ப போகிறது என்று பரவும் செய்திகளுக்கு இலங்கையிலுளள இந்திய ஹை கமிஷன் பதில் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் சேர்ந்து கொண்டுள்ளது.
நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் சென்றதாக
ராஜபக்சே சகோதரர்கள் மீது இலங்கை மக்கள் கடும் கோபத்தோடு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகும் தருணத்தில் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக வன்முறையை ஏவினர்.
இதையடுத்து நாடு முழுவதும் வன்முறை பற்றி எரிகிறது. ஊரடங்கு உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ள இலங்கை அரசு, தனியார் சொத்துக்களையோ பொது சொத்துக்களையோ சேதப்படுத்தினால் கண்டவுடன் சுடுவதற்கு முப்படைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ராஜினாமா செய்த ராஜபக்சே திருகோணமலை கடற்படைத் தளத்தில் பதுங்கி உள்ளதாக அறிந்து அவரைக் கைது செய்ய போராட்டங்கள் தொடர்கின்றன.
இலங்கையில் இருந்து முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதாகவும் தற்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியப் படைகளின் ஒத்துழைப்பை இலங்கை கேட்டிருப்பதாகவும் நேற்று இரவு முதல் தகவல்கள் பரவி வருகின்றன.

கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய ஹை கமிஷன் நேற்று இலங்கை தலைவர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்லவில்லை என்று மறுத்திருந்தது.

இன்று மே 11 கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய ஹை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரிவுகளில் பரவும் ஊகச் செய்திகளை ஹை கமிஷன் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது. இத்தகைய எண்ணமோ திட்டமோ இந்திய அரசிடம் இல்லை.

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் நேற்று தெளிவாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *