விசாரணை கைதி மரணம்: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!

politics

திருவண்ணாமலை விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி மலர். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தங்கமணி சாராய வியாபாரம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சாராயம் விற்பதாக கூறி தங்கமணியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். ஏப்ரல் 27ஆம் தேதி காலை காவல்துறையினரிடம் இருந்து தங்கமணியின் உறவினர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. தங்கமணிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் பொய் வழக்குப் பதிவு செய்து தங்கமணியை போலீசார் சிறையில் அடைத்ததாகவும் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு தங்கமணியின் உறவினர்கள் நேற்று சென்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தங்கமணியின் மனைவி மகன்கள், மகள் ஆகியோர் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், “ தங்கமணியைக் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர் என்றும், இந்த மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கதவுகளை மூடியதோடு, அவர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், காவல் துறையினர் தனது தந்தையிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதைத் தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொன்று விட்டதாகவும் உயிரிழந்த தங்கமணியின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பக்கம் தங்கமணி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுகிறார் என்று கூறி அவரை விசாரணைக்குக் காவல் துறையினர் அழைத்துச் செல்கின்றனர். மறுபுறம், அவரது மகன் காவல் துறையினர் தனது தந்தையிடம் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுப்பதைக்கூடக் காவல் துறை தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காவல் துறையினரே தவறான பாதையில் செல்கின்றனரோ என்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. காவல் துறையினர் மீதே சந்தேகப் பார்வை விழுகின்ற நிலையில், இதனை மாநிலக் காவல் துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது.

எனவே, தமிழக முதல்வர் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்குப் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உயிரிழந்த தங்கமணியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென்றும்” வலியுறுத்தியுள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.40 மணிக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு அவரது உடல் நீதித் துறை நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *