எஸ்.ஐக்கு கத்திக்குத்து: முதல்வர் நலம் விசாரிப்பு!

politics

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வரும் நிலையில் நெல்லையில் பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பாதிப்புக்கு உள்ளான பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மார்க்ரெட் தெரசா பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் அம்மன் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கோயில் கொடை விழா முடிந்த பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்பவருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா தெராசாதான் பதிவு செய்தார் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த முன் விரோதம் காரணமாக ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆறுமுகத்தைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உதவி ஆய்வாளர் சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் நலம் விசாரித்துள்ளார். மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *