அமைச்சர் கூறியது உண்மையாக இருக்கலாம்… ஆனால்: ராமதாஸ்

politics

தமிழகம் முழுவதும் நேற்று இரவு மின் தடை ஏற்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 21) காலை முதல் ட்விட்டரில் #Powercut_Dmk என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் நாட்டில் மின் உற்பத்தி செய்ய நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு, திடீர் மின் வெட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டது.

மின்வெட்டு தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய தொகுப்பிலிருந்து தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையைச் சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக வந்தாலே மின் வெட்டுதான் என்று ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் Powercut_Dmk என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அதுபோன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும். அது தான் கடந்தகால வரலாறு. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை. மாபெரும் தோல்வியை திமுக அரசு சந்தித்து உள்ளது” என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு நீடித்தது. இனி இப்படி நிகழக்கூடாது.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டது தான் மின்வெட்டுக்குக் காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளித்து மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல…. தற்சார்பு மாநிலமும் அல்ல. தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதி தான் நான் எச்சரித்திருந்தேன். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *