தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் இனிப்புகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த டெண்டரில் 100 கோடி ரூபாய் வருடாந்திர வர்த்தக பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைக்கு காரணம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை மட்டும் இந்த டெண்டரை பெறச் செய்து அதன் மூலமாக கமிஷன் பெற வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நம்மிடம் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நமது மின்னம்பலம் இணைய இதழில்… அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி என்ற தலைப்பிலும்… 100 டன் ஸ்வீட் ஒரே நிறுவனத்துக்கு டெண்டர்: விதிகளை திருத்திய அமைச்சர் என்ற தலைப்பிலும் இருவேறு செய்திகளை வெளியிட்டோம்.
மின்னம்பலத்தின் இந்த செய்திகள் கோட்டை வட்டாரத்தை உலுக்கின. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அரசியல் தலைவர்களும் இந்த ஸ்வீட் கொள்முதல் டெண்டர் பற்றி கேள்விகளை எழுப்பினார்கள்.
ஒரு கட்டத்தில் அக்டோபர் 23ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பனிடம் செய்தியாளர்கள் இதை கேள்வியாக எழுப்ப…… அந்த டெண்டர் இன்னும் திறக்கப்படவில்லை. டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டால் ஆவின் நிறுவனத்திடமிருந்து இனிப்புகளை வாங்குவோம்” கூறியிருந்தார்.
இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த தீபாவளி இனிப்பு விவகாரத்தில் சில எறும்புகளின் ஏடாகூடங்களை அறிந்து, போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பனிடம் தனது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். வேறு எந்த தனியார் நிறுவனத்திடமும் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டாம். அரசு நிறுவனமான ஆவின் இடமிருந்து இனிப்புகளை கொள்முதல் செய்யுங்கள் என கண்ணப்பனுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள தலைமைச் செயலாளர்….” தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆவின் தரமான இனிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆவின் இனிப்புகள் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.
எனவே தங்கள் துறை சார்ந்த ஊழியர்களுக்கு பண்டிகையை ஒட்டி இனிப்புகளை வழங்கும் பட்சத்தில் அவற்றை ஆவின் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இனிமேல் அரசு துறை சார்ந்த கூட்டங்களில் வழங்கப்படும் இனிப்புகளையும் ஆவின் நிறுவனத்தில் இருந்து பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையிலும் அவசரம் கருதி உத்தரவை பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இனிப்புகளை தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு பதிலாக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்கலாமே என்று நமது செய்தியில் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் இந்த செய்திக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எடுத்த நடவடிக்கை காரணமாக போக்குவரத்து கழகங்கள் மட்டுமல்ல, அரசின் அனைத்து துறைகளும் தீபாவளி இனிப்பு வழங்கும் பட்சத்தில் மற்றும் துறை சார்ந்த கூட்டங்களில் ஆவின் இனிப்புகளை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இதன் மூலமாக ஆவின் நிறுவனத்துக்கு தீபாவளி ஜாக்பாட் அடித்திருக்கிறது. மற்றத் துறைகளில் இனிப்பு டெண்டர் மூலம் தீபாவளி கொண்டாட காத்திருந்த கமிஷன் எறும்புகளுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி காலை முதன் முதலாக இந்த விவகாரத்தை மின்னம்பலம் வெளியிட்டது. சரியாக ஒரு வாரத்தில் அனைத்துத் துறைகளும் இனி ஆவினில் இருந்தே இனிப்புகளை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை இனிப்பான வகையில் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.
**வேந்தன்**
[ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி](https://minnambalam.com/politics/2021/10/18/27/sweet-purchase-commission-minister-rajakannappan-son-aligations-transport-aavin)
[ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளை திருத்திய அமைச்சர்](https://minnambalam.com/politics/2021/10/21/13/deepavali-tamilnadu-transport-corporation-sweet-tender-minister-rajakannappan)
[மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்](https://minnambalam.com/politics/2021/10/24/21/minnambalam-news-reaction-mkstalin-rajakannappan-deepavali-sweet-from-aavin)
�,”