2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கூடுவது வழக்கம். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 6) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆண்டில் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றிக் கூட்டத்தைத் தொடங்கி வைப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த சபாநாயகர் தனபால், சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
சட்டமன்றத்துக்கு இன்று வருகை தரும் ஆளுநரை சபாநாயகர் தனபால், சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் செல்வார்கள். உரையாற்றுவதற்காக சபாநாயகர் இருக்கைக்கு அருகில் ஆளுநருக்கென பிரத்யேகமாக இருக்கை அமைக்கப்படும். வழக்கமாக ஆளுநர் உரை, அரசின் திட்டப் பணிகள் குறித்தும் அரசைப் பாராட்டும் விதமாகவே அமைந்திருக்கும். ஆளுநர் உரைக்குப் பிறகு இன்றையக் கூட்டம் நிறைவடைந்துவிடும். இதன்பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வார்கள்.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதில், கூட்டத் தொடரில் பேச வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாத சூழலே உள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போராட்டம் நடந்துவரும் நிலையில், சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. அதுபோலவே சிஏஏவுக்கு எதிராக தனிநபர் மசோதாவும் திமுக கொண்டுவரவுள்ளது. இதுதொடர்பாகவும் இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கும் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக திமுக, அதிமுக இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,