a7.5% இட ஒதுக்கீடு செல்லும்: நீதிமன்றம்!

politics

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 07) தீர்ப்பு வழங்கியது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கடந்த அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இட ஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணையிலிருந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும் எனவும் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் , அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால் நீட் பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டு இருக்காது என்று தெரிவித்தனர்.

அதுபோன்று மனுதாரர்கள் தரப்பில், தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 31 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,“பொதுப்பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டில் இந்த 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களிலிருந்து தான் இந்த 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பிரிவினருக்குப் பாதிப்பு ஏற்படாது என்று வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனத் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் எனவும், 5 ஆண்டுகளுக்குப் பின் இதனை அரசு, மறு ஆய்வு செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்த சூழ்நிலையில், இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

அதனடிப்படையில், அரசுக்கு உரியப் பரிந்துரைகளை அளித்திட, டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அளித்த அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 சதவீதம் இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய, அரசால் 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் “இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்’’ இயற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 7.5% முன்னுரிமை அடிப்படையிலான பொறியியல் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, “அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய, அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக் கொள்ளும்’’ என்ற அறிவிப்பினை நான் வெளியிட்டேன்.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தவகையில், படிப்புக் கட்டணம் வழங்குவதற்காக 45 கோடியே 61 லட்சம் ரூபாயும், விடுதிக் கட்டணத்திற்காக 25 கோடியே 32 இலட்சம் ரூபாயும், போக்குவரத்துக் கட்டணத்திற்காக, 3 கோடியே 35 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் 74 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கல்வியாண்டில், 7,876 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றிருக்கிறார்கள். 17-2-2022 வரை 6,100 மாணவர்களுக்கான கட்டணமாக 38 கோடியே 31 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தச் சூழ்நிலையில், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையிலான அரசு ஒதுக்கீட்டிற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, இருதரப்பு வாதங்களும் முடிவுற்று, இன்று நமக்குச் சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மாமன்ற உறுப்பினர்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தரவுகளின் அடிப்படையிலும், முறையான கலந்தாலோசனை செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்ட முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம்.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன். சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையைத் தமிழகம் தொடர்ந்து செய்திடும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *