கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் போகிற வழியில் சிப்காட் வளாகத்தில் குடிகாடு ஊராட்சிக்குட்ப்பட்ட பகுதியில் கிரிம்ஸன் ஆர்கானிக் எனும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்த ஆலையில் இன்று (மே 13) காலை 7.40 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதனால், கெமிக்கல் வெளியாகி அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உள்ளே சிக்கி கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடலூர் பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (42), செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கணபதி (25), காரைக்காடு பகுதியைச் சேர்ந்த சவீதா(35), பரங்கிபேட்டையைச் சேர்ந்த விசோஸ்ராஜ் (25) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சத்தியமூர்த்தி, மணிகண்டன், சபரி, ராம்குமார், செல்வி, வினோத் குமார் உள்பட 14 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கூறிய அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த தீ விபத்து குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இதில் நிறுவனத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
**வினிதா, வணங்காமுடி**
�,”