gஜவ்வாது மலையில் கோர விபத்து: 11 பேர் பலி!

public

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்து இருக்கும் புதூர் நாடு, புங்கப்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சேம்பரை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்று.

இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் சேம்பரை ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மலை கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக இன்று காலை சென்றுள்ளனர். புலியூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரும் திறந்த மினிவேனில், அந்தக் கோயிலுக்குப் புறப்பட்டனர். வேனை பரந்தராமன் என்பவர் ஓட்டிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, மலைப்பாதையில் பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னோக்கி செல்லாமல் பின்நோக்கிச் சென்று 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பகுதி என்பதால் எளிதில் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் சுகந்தா, துர்கா, மங்கை, செல்வி மற்றும் 12 வயது சிறுமிகளான பவித்ரா, பரிமளா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 16 வயதான ஜெயப்பிரியா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியான அனைவருமே பெண்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலை பாதை காரணமாகவும், செல்போன் சிக்னல்கள் முறையாக கிடைக்காததாலும் மீட்புப் பணிகள் தாமதமாகவும் தொய்வுடனும் நடைபெற்றன.

விபத்து சம்பவம் குறித்து அறிந்து திருப்பத்தூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா சிகிச்சை பெற்று வரும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஜவ்வாது மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “இதே விபத்தில் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு இலட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *