அமலாக்கத் துறைக்கு அனுமதி: செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!

politics

உயர்நீதிமன்ற உத்தரவு விவரம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளில் ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
அதை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது… முக்கிய உத்தரவை மார்ச் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது அரசியல் ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

செந்தில் பாலாஜி காலம் சென்ற ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக பலரிடம் பெரிய அளவில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
441/2015, 298/2017, 344 /2018 ஆகிய எண் கொண்ட இந்த வழக்குகள் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்டன. இதில் வழக்கு எண் 344 சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது ‌‌புகார் கொடுத்தவர்கள் தங்களுக்கு உரிய பணம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்குகளின் அடிப்படையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது 2021 ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குக்காக அமலாக்கத் துறையின் துணை இயக்குனர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் தொடர்புடைய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை வழக்குக்காக வழங்க வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த வழக்கில் கடந்த 9-11 -2021 சிறப்பு நீதிமன்றம் சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்தது.

இதனடிப்படையில் அமலாக்கத்துறை சென்னை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் மாநில அரசு சார்பில் வாதாடிய தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ” ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் படி சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மூன்றாவது தரப்பினர் கேட்கும் ஆவணங்களை வழங்கவோ மறுக்கவோ முழு உரிமை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது” என வாதாடினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ” செந்தில் பாலாஜி மீது பதியப்பட்டுள்ள பண மோசடி தடுப்புச் சட்டத்தின் படியான வழக்கின் புலனாய்வு என்பது சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது கடந்த வழக்குகளில் போலீஸ் சேகரித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது.
அந்த ஆவணங்கள் இல்லாமல் செந்தில் பாலாஜியை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் திமுக சார்பில் வெற்றி பெற்று தற்போது திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். இந்த காரணத்தால் தற்போதைய அரசின் போலீசார் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பிரகாஷ், நக்கீரன் ஆகியோர்
“அமலாக்கத்துறை சார்பில்
உரிய விதிகளை பின்பற்றி சிறப்பு நீதிமன்றத்தின் முன் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு புதிய மூன்றாம் தரப்பு மனுவை தாக்கல் செய்யலாம். சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆவணங்களை பார்வையிட அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு உரிமை உண்டு. அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் ஆவணங்களில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுக்க கூடாது. தங்களுக்கு தேவையான ஆவணங்களை குறிப்பிட்டு அந்த ஆவணங்கள் தேவைப்படுவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனுவை தாக்கல் செய்யலாம்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை தயாராகிறது.

நேற்று மார்ச் 30ஆம் தேதி கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர் அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டின் முக்கியமான இன்னொரு அமைச்சருக்கு அமலாக்கத்துறை வழக்கில் சம்மன் வந்திருக்கிறது. இந்த அமைச்சரும் போய் நான் இன்னும் 2 வாரத்தில் வந்து விசாரணையில் ஆஜராகி கிறேன் என்று தேதி கேட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை குறிப்பிட்ட அமைச்சர்களில் முதலாமவர் அனிதா ராதாகிருஷ்ணன். இரண்டாவது அமைச்சர் செந்தில்பாலாஜி தான். உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் பிடி இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *