|பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின்

politics

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார்.

ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இது அதிகாரப்பூர்வ சந்திப்பாக இல்லை. இந்த சந்திப்பு ஒருசில நிமிடங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்துக்குச் சென்று அங்கு பிரதமரை சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்று திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது.தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவை என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர் மு.க‌. ஸ்டாலின் என டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனி நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

பிரதமர் சந்திப்பை அடுத்து அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அதன் பிறகு இன்று மாலை தமிழக முதல்வர் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *