3,500 கோடி முதலீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

politics

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் தொழில் செய்யும் நிறுவனமான லூலு நிறுவனம் தமிழ்நாட்டில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (மார்ச்28) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அபுதாபியில் கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் மேற்கொண்டு வரும் பயணத்தின் இன்றைய தினம் (மார்ச் 28) அபுதாபியில் முபாதாலா டவர்ஸில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார்.

முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குனர் சையத் அரார் உடனான சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார். முபாதாலா நிறுவனம் ஏற்கனவே பிரின்ஸ்டன் டிஜிட்டல் என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

மேலும் முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் ஆகியவற்றுக்கிடையே ஒரு பணிக் குழுவை அமைத்து தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழில் பூங்காக்கள் மற்றும் உடனடியாக தொடங்கப்படும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள், தகவல் தரவு மையங்கள் போன்ற மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கான திட்டங்கள் வகுத்திட அந்த நிறுவனத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

அபுதாபி வர்த்தக சபை தலைவர், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தக கூட்டமைப்பு தலைவரான அப்துல்லா முஹம்மது அல் மஸ்ரோயி உடன் முதல்வர் சந்தித்து தமிழ்நாட்டிலிருந்து உணவுப்பொருட்களை அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

இதுபோன்ற சந்திப்புகளை முடித்துக்கொண்டு லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான யூசுப் அலியை அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது முதல்வர் முன்னிலையில் லுலு நிறுவனம் 3,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதில் 2500 கோடி ரூபாய் முதலீடுகளில் வணிக வளாகங்கள், ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவுப் பதப்படுத்தும் நிறுவனம் நிறுவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகளின்போது தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அபுதாபியில் தமிழர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அதையடுத்து சென்னை திரும்புகிறார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *