வேலைநிறுத்தத்தில் திமுக இரட்டை வேடம்: பாமக, அதிமுக!

politics

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களைப் பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இன்று (மார்ச் 28) மற்றும் நாளை (மார்ச் 29) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுமன்றம் அழைப்பு விடுத்தது. அதன்படி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இன்று பாரத் பந்த் நடைபெற்றது.

இதனிடையே, பந்த் குறித்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த போது, ஆளும்கட்சியான திமுக முழு ஆதரவு தெரிவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். ஆனால் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது, இதையும் மீறி வேலைநிறுத்ததில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசுப் பேருந்துகளின் சேவை வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட வரலாறு கடந்த 14 ஆண்டுகளில் இல்லை. ஆனால், இப்போது நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றிருப்பதால் தமிழகத்தில் போக்குவரத்துச் சேவை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது.

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் போராட தொழிற்சங்கங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதேநேரத்தில் அத்தகைய போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையைச் செய்வதில் தமிழக அரசு தவறி விட்டது. ஒருபுறம் இந்த வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. மற்றொருபுறம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது.

அரசு உறுதியாக இல்லாதது தான் மக்களின் அவதிக்குக் காரணமாகும். தமிழக அரசு நினைத்திருந்தால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து இருக்கலாம். வழக்கமாக வேலைநிறுத்தங்கள் அறிவிக்கப்படும் போது போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துத் துறை செயலாளர், ஆணையர், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணிமனைகளில் முகாமிட்டு பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்வார்கள். ஆனால், இம்முறை ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. அதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அந்தத் தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை. வேலைநிறுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருந்தால், குறைந்தபட்சம் தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்திருக்கலாம். தமிழக அரசின் வெற்றியை விடத் தொழிற்சங்கத்தின் வெற்றியையே ஆட்சியாளர்கள் முக்கியமாகக் கருதியதால் தான் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று, மதுரை பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரளம் போல வெளிப்படையாக பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *