சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போரும் நவீன முதலாளித்துவ கால கொள்ளையும்!

politics

பாஸ்கர் செல்வராஜ்

போர் என்றதும் நம் மனதில் தோன்றுவது ஒரு நாடு, மற்ற நாட்டைப் பிடிக்கச் செல்கிறது என்பதான ஒரு சித்திரம். விவசாயம், கால்நடை வளர்ப்பு முதன்மையாக நடந்த அந்தக் காலங்களில் இந்த உற்பத்தி சார்ந்த நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது கால்நடைகளைக் கவர்வது அந்தக் காலத்தில் போரிடும் அரசர்களின் நோக்கமாக இருந்தது. பின்பு வர்த்தகம் வளர்ந்து தங்க, வெள்ளிக்காசுகள் பரிவர்த்தனை ஊடகமான பிறகு, நிலத்தை ஆக்கிரமிப்பதோடு செல்வத்தின் உருவமான இவற்றை கொள்ளையடிப்பதும் சேர்ந்து கொண்டது. வரலாற்றில் கஜினி முகமது, சிவாஜி எனப் பலரும் இப்படியான கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளித்துவம் வளர்ந்து காகிதப்பணம் வந்து முதலீடு, தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், சரக்கு போக்குவரத்து, விற்பதற்கான சந்தை, மலிவான தொழிலாளர்கள் என உற்பத்தியின் பரிமாணம் பெருமளவு மாறிவிட்டது. முடியாட்சியில் இருந்து மக்களாட்சிக்கும் வந்துவிட்டோம். போர்கள் இன்னும் நின்று விடவுமில்லை; போருக்கான நோக்கங்களும் பெரிதாக மாறிவிடவுமில்லை. மாறாக அதன் பரிமாணங்கள் பரந்து விரிந்திருக்கிறது.

**காலத்துக்கேற்ப மாறும் போரின் நோக்கம்!**

உக்ரைன் போரைப் பொறுத்தவரையில் போரின் குறுகியகால நோக்கம் ஐரோப்பிய சந்தைக்குத் தேவையான எரிவாயு குழாய்கள் செல்லும் இந்த நாட்டை இவர்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது. இந்த நாட்டின் எல்லையைப் பயன்படுத்தி நேட்டோ ரஷ்யாவின் எண்ணெய் எரிவாயு வளத்தைப் பிடிப்பதும், ஐரோப்பிய சந்தையை ரஷ்யா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைப்பதும் நீண்டகால நோக்கம். இது முதன்மையான நோக்கமே தவிர, இந்த நோக்கம் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் இன்றைய முக்கிய பிரச்சினை கொரோனா வந்த பிறகு கிட்டத்தட்ட ஏழு ட்ரில்லியன் டாலர் பணத்தை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கமும் விலைவாசி உயர்வும். இப்போது மிகையாக சந்தையில் இருக்கும் டாலர்களை மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளிழுக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும். அமெரிக்க மக்களின் வங்கிக் கணக்கில் போட்ட பணம் ஏற்படுத்திய தேவை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்போது வட்டியை உயர்த்தினால் உற்பத்திக்கான முதலீடு கிடைப்பது கடினமாகிவிடும். தேவையும் குறைந்து, உற்பத்தியும் குறைந்தால் அது தேக்க பணவீக்கத்தை (Stagflation) ஏற்படுத்தும். எனவே இதற்கு மாற்றுவழி கண்டாக வேண்டும்.

**இன்றைய வர்த்தகம், பரிவர்த்தனை, செல்வம்…**

உலக நாடுகள் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவது அனைவரும் அறிந்தது. இந்த ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை. ஆதலால் நாடுகள் பொருளை கொடுத்து டாலரை வாங்கிக்கொள்ளும். பின்பு தேவையின்போது இந்தப் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கிக்கொள்ளும். தேவைக்குப் போக எஞ்சியவற்றை கையிருப்பாக வைத்திருக்கும். இதை மற்ற நாணயமாகவோ, தங்கமாகவோகூட மாற்றி வைத்திருப்பார்கள். ஆனால், பெரும்பாலும் இவை டாலராகவும் யூரோக்களாகவும் இருக்கின்றன. இந்தக் கையிருப்பு ஒரு நாட்டுக்குள் மட்டுமல்ல; தாங்கள் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளிலும் வைத்திருப்பார்கள். ஒரு நாட்டிலுள்ள ஒருவர் பொருளை ஏற்றுமதியோ, இறக்குமதியோ செய்துகொண்டு அதற்கான பணத்தைப் பெறவோ, தரவோ அவரின் வங்கிக் கணக்கில் இருந்து வங்கியின் மூலமாக மற்ற நாட்டு வங்கிக்குச் செய்தி அனுப்பப்படும். அது வங்கிகளின் பரிமாற்ற அமைப்பான SWIFT வழியாக மற்ற வங்கிக்குச் சென்றடையும். செய்தி கிடைத்தவுடன் அந்த நாட்டில் இருக்கும் வங்கி உரிய நபரின் கணக்குக்குப் பணத்தைச் செலுத்தும்.

**நவீன கொள்ளை!**

இந்தக் கையிருப்பு பணமான டாலரும் யூரோவும், செய்தி பரிமாற்ற SWIFT அமைப்பும் அமெரிக்க மற்றும் மேற்குலகின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரு நாட்டை இந்த அமைப்பில் இருந்து நீக்கும்போது அது உலக வர்த்தக அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுகிறது. இரண்டாவது, அந்த நாடு கையிருப்பாக வைத்திருக்கும் பண இருப்பை முடக்கும்போது இதுவரையிலும் சேர்த்த செல்வத்தை இழந்து அதன் வர்த்தகமும் பொருளாதாரமும் முடக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்படுகிறது. இதை நவீன நிதியத் தாக்குதல் (Financial Warfare) என்கிறார்கள். இதற்கு உலக மக்களின் ஒப்புதலைப் பெறும்வகையில் அந்த நாட்டின் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வலுவான ஊடகத்தைப் பயன்படுத்தி உலகம் முழுக்க பரப்பி ஒரு பொதுவான கருத்தைக் கட்டமைப்பதை தகவல்தொடர்பு போர் (Infowar) என்கிறார்கள். 2008 பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இப்போது போலவே ட்ரில்லியன் கணக்கில் டாலரை அச்சிட்டதால் பணவீக்கம் ஏற்பட்டது.

இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு 2012இல் ஸ்விப்ட் அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு அதன் 100 பில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டன. இப்போது உக்ரைன் நேட்டோவில் இணைய உரிமை இருக்கிறது என்பதைப் போல அந்த நாடு, அணு ஆயுதம் தயாரிக்க உரிமை இருக்கிறது என்று யாரும் பேசவில்லை. எண்ணெய் ஏற்றுமதி சந்தையில் இருந்து அது ஓரம் கட்டப்பட்டு அதன் ஜப்பான், தென்கொரியா, இந்தியச் சந்தைகள் கைப்பற்றப்பட்டன. 2019இல் மற்றொரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான வெனிசுவேலாவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் நிகழ்த்த அதன்மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் சந்தையும் இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த நாட்டின் மில்லியன் கணக்கான டாலர் சொத்துகள் முடக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்களால் நியமிக்கப்பட்ட குவைடோவின் அரசியல் செலவுகளுக்கு அந்தப் பணம் திருப்பிவிடப்பட்டது. இதேபோல பில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தானின் சொத்துகளை முடக்கிவைத்திருந்த அமெரிக்கா அந்த மக்கள் உணவுக்கு வாடும் சூழலில் அந்தப் பணத்தை 7/11 தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அடுத்த நாட்டின் சொத்தை அபகரித்து முடக்குவது மட்டுமல்ல; அதை இவர்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் சட்ட அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது என்று யாரும் கேட்பதில்லை. எல்லை கடந்து நீளும் இந்த (அ)நீதிக் கரங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை.

**களவாடப்பட்ட ரஷ்யாவின் செல்வம்!**

இப்போது உக்ரைன் போரைத் தொடர்ந்து அந்த நாட்டின் வங்கிகள் அனைத்தும் ஸ்விப்ட் அமைப்பில் இருந்து விலக்கி அதன் சொத்துகள் முடக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் 643 பில்லியன் டாலர் சொத்தில் இருபத்தைந்து விழுக்காடு ரஷ்ய, சீன நாடுகளில் இருக்கிறது. மற்ற 400 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை அந்த நாடு இப்போது பயன்படுத்த முடியாது. இதற்கும் அமெரிக்கப் பணவீக்கத்தைக் குறைக்க டாலரை உள்ளிழுப்பதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இயலாது. வருடாந்திர அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய பைடன்… சாலைகள், பாலங்கள் என மிகப் பெரும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் புதிய டாலர் வெளியீடு செய்யமுடியாத சூழலில் இதற்கான பணம் எங்கிருந்து வரும் என அவர் சொல்லவில்லை. மேலும் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுக்கும் என்றும் சொன்னார். அதன் பொருள் இந்த முடக்கப்பட்ட சொத்துகளா, இதன் மூலம் சந்தையில் குறையும் டாலர் புழக்கத்துக்கும் அதன் தேவைக்கும் புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதா என்பதும் தெரியவில்லை.

மேலும் ஐரோப்பிய அணிகள் அமெரிக்காவின் பின் இப்போது அணிவகுத்திருப்பதாகச் சொன்னதும் அவையில் கரவொலி எழுந்தது. ஆம்.. ஜெர்மனி முழுவதுமாக அமெரிக்க சார்புநிலைக்கு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் நடுநிலை வகித்தவர்கள்கூட நேட்டோவில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள். ரஷ்ய எரிவாயு சார்பை உடைப்பதில் முழுவீச்சாக ஐரோப்பா ஈடுபட்டிருக்கிறது. ஜெர்மனி கப்பல் வழியாக வரும் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிதாக இரண்டு இறக்குமதி நிலையங்கள் கட்டப்போவதாக சொல்லி இருக்கிறது. அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு கத்தார் எரிவாயு ரஷ்யாவின் இடத்தை இப்போதைக்கு பூர்த்தி செய்யும். ரஷ்யாவில் இருந்து முக்கிய எண்ணெய் நிறுவனங்களான அமெரிக்காவின் எக்ஸ்சான்மொபில், இங்கிலாந்தின் பிபீ போன்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறப் போவதாக அறிவித்திருக்கின்றன. மற்ற அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவுடனான ஐரோப்பிய எண்ணெய் கும்பலின் கூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யா மேற்கின் தொடர்பில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதவிய உக்ரைன் என்ன பெற்றது?

**மதியம் 1 மணி பதிப்பில் காணலாம்**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்**, தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *