~திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் கட்சியை விட்டு நீக்கம்?

politics

கடலூரில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ ஐயப்பனை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சீனியர்கள் ஆலோசித்ததாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த, கவுன்சிலர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக நேற்று (மார்ச் 4) மின்னம்பலத்தில், [கவுன்சிலர்கள் கடத்தல் போலீஸ் பிடியில் திமுக எம் எல் ஏ.](https://minnambalam.com/politics/2022/03/04/27/Councilors-abducted-in-cuddalore-DMK-MLA-arrested-by-police) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரனின் மனைவி கீதாதான் கடலூர் மாநகராட்சி மேயர் என்று பேசப்பட்டது. ஆனால் கடலூர் மாநகராட்சி திமுக நகர செயலாளர் ராஜா மனைவி சுந்தரி பெயரை திமுக தலைமை அறிவித்தது.

இதையறிந்து பொருளாளர் குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். கடலூர் சட்டமன்ற உறுப்பினரான ஐயப்பனும் அதிர்ச்சி அடைந்தார்.

எனவே, நகர செயலாளரின் மனைவி மேயர் பதவி ஏற்க கூடாது எனத் திட்டமிட்ட எம்.எல்.ஏ. ஐயப்பன் தனது ஆதரவாளர்களான 19 கவுன்சிலர்களை மூன்று டீமாக பிரித்து கடத்தி வைத்தது குறித்தும், அவர்கள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விடிய விடிய எடுத்த விடாமுயற்சியால் விழுப்புரம் ரிசார்ட்டில் இருக்கும் ஏழு பேரை தவிர மற்ற திமுக கவுன்சிலர்கள் அன்று காலை கடலூர் மாநகராட்சிக்கு வந்து வாக்களித்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.

இதனிடையே, இந்த தகவல்களைக் கேள்விப்பட்ட திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனக்கு நம்பிக்கையான துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையை மே 3ஆம் தேதி இரவே கடலூருக்கு அவசரமாக அனுப்பி வைத்தார்.

அதன்படி கடலூர் வந்த அன்பகம் கலை, கிழக்கு மாவட்ட செயலாளரும் விவசாயத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நடந்தவற்றை நேரடியாக விசாரித்தார். பின்னர், கவுன்சிலர்களை கடத்திய ஐயப்பன் எம்எல்ஏவிடமும் போனில் பேசினார்.

அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், “நகர செயலாளர் ராஜாவிடம் 4 கவுன்சிலர்கள் கூட இல்லை. அவரை கடலூர் பொதுமக்கள், வியாபாரிகள், கட்சியினர் என யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது மனைவி சுந்தரிக்கு மேயர் பதவியை அறிவிக்கிறார்கள். அவர் இல்லாமல் வேறு யாருக்காவது கொடுங்கள். நான் கவுன்சிலர்களை அழைத்து வருகிறேன். மேலும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சாதி அரசியல் செய்கிறார்” என்று அன்பகம் கலையிடம் புகார் கூறினார்.

இதையடுத்து 4ஆம் தேதி காலை 4.00 மணிக்கு, கடலூர் திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகர செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகளுடன் அன்பகம் கலை பேசினார்.

“மேயர் வேட்பாளரை மாற்றினால் எம்எல்ஏ ஒத்துழைப்பு கொடுப்பதாக சொல்கிறார். தலைவரிடம் சொல்லி வேட்பாளரை மாற்றலாமா?”
என அன்பகம் கலை கேட்க, அதற்கு, “வேண்டாம்… நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இருந்து மேயர் பதவி ஏற்ற பின் செல்லுங்கள்” என எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பதில் கூறினார்.

அப்போது அன்பகம் கலையிடம் பேசிய அங்கிருந்த திமுக நிர்வாகி ஒருவர், “2006ல் எம்எல்ஏவாக இருந்த ஐயப்பன், தனக்கு 2011ல் எம்எல்ஏ சீட் கொடுக்கவில்லை என்று தலைவர் கலைஞர் படத்தை சாலையில் போட்டு உடைத்தார். திமுக கொடி கம்பங்களை துண்டு துண்டாக உடைத்து போட்டார். தலைவர் குடும்பத்தை கேவலமாக பேசினார். ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, திமுகவை அழிப்பேன் என்று சபதம் எடுத்தவர் தான் இந்த ஐயப்பன்’ என்று கூறினார்.

மேலும் அங்கிருந்த நிர்வாகிகள், “9 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்த ஐயப்பன், தேர்தல் சமயத்தில் திமுகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக எம்எல்ஏ சீட்டும் கொடுத்தோம். இதனால் திமுகவில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு கூட சீட் கொடுக்க முடியவில்லை” என்று ஐயப்பன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.


இந்த சூழலில் நேற்று(மார்ச் 4) காலை, ஓசோன் ஸ்பிரே ரிசார்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு எம்எல்ஏ ஐயப்பன் புறப்பட தயாரானார்.

அப்போது அங்கு சென்ற போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த கவுன்சிலர்கள், திமுக கட்சியினர் மற்றும் எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே செல்ல முயன்றதால் அவர்கள் மீது போலீசார் லேசான லத்தி சார்ஜ் நடத்தினர். அதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. சிலர் தெரித்து ஓடினார்கள்.

இந்த விபரம் தெரிந்து புதுச்சேரி திமுக மாநில நிர்வாகியான எம்எல்ஏ சிவா ரிசார்ட்டுக்கு வந்து ஐயப்பனை அமைதிப்படுத்தினார். அன்பகம் கலையும் நேரடியாக ரிசார்ட்டுக்கு வந்து ஐயப்பன் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஐயப்பன் எம்.எல்.ஏ, “இப்படி சொந்த கட்சி கவுன்சிலர்களை ஓட்டு போடமுடியாமல் போலீசை வைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். என்னை வெளியில் போகவிடாமல் கைதி போல் வைத்திருக்கிறார்கள். என்ன ஜனநாயகம்? எங்களை வெளியில் அனுப்பினால், ராஜா மனைவி சுந்தரி மேயராக வரமுடியாது. தோற்கடிப்போம். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவரது உறவினர்களுக்கும் கையாளுக்கும்தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். உண்மையான கட்சியினருக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை. சாதி அரசியல் செய்கிறார்” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதை கேட்ட அன்பகம் கலை, உங்கள் கருத்துகளையும், அமைச்சர் தரப்பு கருத்துகளையும் தலைவரிடம் தெரியப்படுத்துகிறேன் எனக் கூறி வெளியேறினார். நேராக கடலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், வெற்றி பெற்ற சுந்தரியை மேயர் இருக்கையில் அமர வைத்து விட்டு சென்னைக்குப் புறப்பட்டார்.

இந்நிலையில், 33 மற்றும் 39 ஆவது வார்டு கவுன்சிலர்கள், எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை கடத்தி சென்றதாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் ஐயப்பன் எம்எல்ஏவை கைது செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாக கடலூர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அன்பகம் கலை கடலூரில் நடந்தது தொடர்பாக கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, ஐயப்பனை கட்சியில் இருந்தே நீக்கினால் என்ன என்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனிடம் கட்சி சீனியர்கள் ஆலோசித்துள்ளனர்.

**-வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *