Xபஞ்சாபில் மக்கள் ஆதரவு யாருக்கு?

politics

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று நிறைவடைந்தது. இதில் நேற்று மாலை நிலவரப்படி, 69.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு தேர்தலில் 77.4% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் அதிகபட்சமாக 77.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொஹாலியில் குறைந்தபட்சமாக 62.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டமன்றத் தொகுதிகளில், தல்வாண்டி சபோ தொகுதியில் அதிகபட்சமாக 83.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அமிர்தசரஸ் மேற்கு பகுதியில் மிகக் குறைந்த அளவாக 50.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பஞ்சாபில் மிகக் குறைந்த வாக்குப்பதிவைக் கொண்ட மாவட்டங்களில் அமிர்தசரஸ் ஒன்றாகும். காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த பிக்ரம் சிங் மஜிதியா இடையே கடுமையான போட்டி நிலவும் அமிர்தசரஸ் கிழக்கில் 53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட பதார் மற்றும் சம்கவுர் சாஹிப் தொகுதியில் முறையே 71.30% மற்றும் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் நின்ற துரி தொகுதியில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் போட்டியிட்ட லாம்பி மற்றும் ஜலாலாபாத் தொகுதிகளில் முறையே 72.40% மற்றும் 77% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் போட்டியிடும் பாட்டியாலா நகரில் 62.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் பதான்கோட்டின் சுஜான்பூர் சட்டமன்றத் தொகுதியில் 71.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் தேர்தல் குறித்து அமரீந்தர் சிங் கூறுகையில், “பாட்டியாலா தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். ஆம் ஆத்மி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. காங்கிரசைப் பொறுத்தவரை அக்கட்சி வேறு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் துடைத்து எறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயத்தில் காங்கிரஸ் தான் பஞ்சாபில் ஆட்சி அமைக்கும். மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம் என்று பஞ்சாப் முதல்வர் சன்னி கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், “இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மையைப் பிடிக்கும். மக்கள் உண்மை பக்கம் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

80க்கும் அதிகமான தொகுதிகளை அகாலி தளம் கைப்பற்றும் என்று அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *