நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல, புரட்சியவாதிகள்: சீமான்

politics

நாங்கள் சீர்திருத்தவாதிகள் இல்லை; புரட்சியவாதிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று(பிப்ரவரி 17) செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. நேர்மையான, ஊழலற்ற, தூய்மையான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் என்றைக்கு ஒழிந்துபோகும் என்று தெரியவில்லை. கோயில் கருவறையில் இருந்து தாயின் கருவறை வரை லஞ்சம். பணம் உள்ளவர்கள்தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனால், திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என்ற நிலை மாற வேண்டும். நாங்கள் ஆட்சி மாற்றம், ஆள் மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கு போராடி வருகிறோம். கட்டப்பட்ட கட்டிடத்திற்கு வெள்ளையடிக்கவோ, பழுதுபார்க்கவோ நாங்கள் வரவில்லை. அந்த கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டிடம் கட்ட வருகிறோம். நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல புரட்சியவாதிகள் என்று முழக்கமிடுகிறோம்.

திமுகவினர், அவர்களுக்கு வாக்கு சேகரித்ததைவிட, சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று வீடு வீடாக சென்று சொன்னதுதான் அதிகம். சீமான் பாஜகவின் பி டீம். அதனால், அவருக்கு ஓட்டுபோட வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். ஒரு நேர்மையான கட்சி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம், போட்டால் பாஜக வந்துவிடும் என்றுதானே சொல்ல வேண்டும். இல்லை பாஜகவுக்கு போட வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். இது என்னவிதமான அணுகுமுறை என்று தெரியவில்லை. நாகர்கோவில் குளச்சலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக போட்டியிடாத நிலையில், பாஜகவும் நாம் தமிழரும்தான் போட்டியிடுகிறது. இதில் எங்கே திமுக பாஜகவை எதிர்க்கிறது. மக்கள் இதை எல்லாம் கவனித்து, உண்மையாக ஒரு மாற்றத்தை பெற விரும்பினால், இரண்டையும் புறக்கணித்து விட்டு, உங்களிடமிருந்து வந்த உங்கள் பிள்ளையாகிய எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *