aநீயா, நானா? வேலுமணி Vs செந்தில் பாலாஜி

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாநகராட்சி முடிவுகளை அந்தந்த மாநகரங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மாநகராட்சிகளில் சென்னையை அடுத்து முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுவது கோவை மாநகராட்சி.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வென்றன. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த வெற்றிக்கு காரணகர்த்தாவாக அதிமுகவினரால் கொண்டாடப்பட்டார்.
ஆட்சிக்கு வந்ததும் கோவையின் மீது சிறப்பு கவனம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஆளும்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.
வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டி என்பதைவிட வேலுமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையிலான போட்டியாகவும் மாறியிருக்கிறது.
தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38,411 வாக்காளர்கள் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். கோவை மாநகராட்சியை கைப்பற்றுவதில் வேலுமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் நடக்கும் போட்டி பற்றி இரு தரப்பினரிடமும் பேசினோம்.
வேலுமணி அதிகாரத்தில் இருந்தபோது திமுகவுக்குள் ஊடுருவி திமுக கூடாரத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப தனது வியூகங்களை மாற்றினார். அதனால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. மிக நெருக்கமாக சில இடங்களில் திமுக வாக்குகள் பெற்றபோதும் அதிமுக ஜெயித்த காரணம் வேலுமணியின் இந்தக் கடைசி நேர காரியங்கள்தாம்.
அதேபோல இப்போதும் திமுக கூடாரத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் வேலுமணி அறிந்துகொள்கிறார். வேலுமணியால் பலன் பெற்ற விசுவாசமான சில நிர்வாகிகள் மாவட்ட திமுகவில் முக்கியமான நிலைகளில் இருக்கிறார்கள். இவர்கள் பற்றி கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமைக்குப் பல புகார்கள் சென்றபோதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் அவர்கள் வழக்கம் போல திமுகவில் இருந்துகொண்டே வேலுமணிக்கான தேர்தல் பணிகளை ஆற்றி வருகிறார்கள். இது வேலுமணியின் முக்கியமான பலம்.
மேலும் தற்போது கோவையின் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோரோடு அடிக்கடி கூட்டங்கள் நடத்தி முடுக்கிவிட்டுக் கொண்டே இருக்கிறார் வேலுமணி. முக்கிய ஒப்பந்ததாரர்களான சந்திரசேகர், செந்தில் உள்ளிட்டவர்களும் வேலுமணிக்கு கரன்சி கைகளாக இருந்து பலம் சேர்க்கிறார்கள்.
‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி செய்தோமோ அதே மாதிரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் ஜெயிக்க வேண்டும். என்ன செலவானாலும் பரவாயில்லை? எதிரிகளுக்கும் சேர்த்தே செலவு செய்யுங்கள். தேர்தல் முடிவுகள் அதிமுகவில் நம்மை யார் என்று அடையாளம் காட்ட வேண்டும்.
மாநகரத்தில் சுமார் 3 லட்சம் மலையாள மக்கள் வாக்குகள் உள்ளன. அது அத்தனையும் நமது தலைவர் எம்ஜிஆரின் வாக்கு வங்கி. எனவே அந்த வாக்குகள் நமக்கு முழுமையாக வர வேண்டும்’ என்று ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கியிருக்கிறார் வேலுமணி.
எதிரிகளுக்கும் சேர்த்து செலவு செய்யுங்கள் என்று அவர் குறிப்பிட்டது, அந்தந்த பகுதிகளில் திமுகவினருக்கும் செலவு செய்யுங்கள் என்பதுதான்.
அதிமுக சார்பில் முதல்கட்ட பூத் செலவுக்கு ஏற்கனவே பணம் கொடுக்கப்பட்டு விட்ட நிலையில் இரண்டாம்கட்ட பூத் செலவுக்கு 10,000 ரூபாய் கொடுத்துள்ளனர். கட்சியினருக்கான இந்தச் செலவுகளைத் தாண்டி வாக்குக்கான பணமும் பெரிய அளவில் திட்டமிட்டுள்ளனர் அதிமுகவினர்.

**திமுகவில் என்ன நடக்கிறது?**
வேலுமணியை போல செந்தில் பாலாஜிக்கு ஸ்லீப்பர் செல்கள் உதவி இல்லை. ஆனாலும் மேலிடத்திலிருந்து வருகிற உளவுத் துறை தகவல்கள், போலீஸ் ரிப்போர்ட் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதிமுகவினரின் நகர்வுகளுக்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வருகிறார்.
கோவை மாவட்டப் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதுமே, விமான நிலையம் அருகில் வீடு எடுத்து கரூர் கோவை சென்னை என்ற முக்கோணப் பயணத்தைத்தான் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறார் செந்தில் பாலாஜி.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அதையடுத்து உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட பால் முகவர்கள் மாநாடு ஆகியவற்றின் மூலம் கோவை மக்களையும் திமுகவினரையும் தேர்தலுக்காக தயார் செய்தார் செந்தில் பாலாஜி.
திமுகவின் கோவை மாவட்டச் செயலாளர்களான பையா கிருஷ்ணன், கார்த்திக், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை தொடர்ந்து சந்தித்து செயல் திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறார் செந்தில் பாலாஜி.
கோவை மாநகரத்தில் எந்தெந்த வார்டுகளில் திமுக வீக்காக இருக்கிறது என்ற பட்டியல் மேலிடம் மூலம் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தேவையை உணர்ந்துகொண்ட செந்தில்பாலாஜி, ’75 வார்டுகளில் திமுகவை வெற்றி பெறவைத்து திமுக கவுன்சிலரை மேயர் ஆக்குவேன்’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அதன்படியே திமுகவினரின் பொருளாதாரத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறார்.
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அனைத்து பூத்துகளுக்கும் 5,000 முதல் 10,000 வரை வழங்கப்படுகிறது. தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பிருந்தே இந்த தொகை 10,000 முதல் 25,000 ஆக ஆக்கப்படும் என்கிறார்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்.
பூத் கமிட்டிகள் தினந்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக வார்டு செயலாளர்களுக்கு ஏற்கனவே தனியாக ஒரு பெரும் தொகையைக் கொடுத்து விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
வாக்குக்குப் பணம் கொடுக்கும் விஷயத்திலும் தனது நேர்த்தியான சிஸ்டத்தை அமல்படுத்துவதற்காக கரூர் டீமை தயார் நிலையில் வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
கோவையில் கணிசமாக வாக்குகளை வைத்திருக்கும் பாஜக, நகர்ப்புறங்களில் கவனிக்கத்தக்க வாக்குகளைப் பெறும் மக்கள் நீதி மய்யம் போன்றவை அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் நம்புகிறார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜியும் எஸ்.பி.வேலுமணியும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள்தான். ஆனால், கால ஓட்டத்தில் இருவரும் நேர் எதிரான அரசியல் நிலைப்பாட்டில் நிற்கிறார்கள்.
கரூரில் இருந்து அமைச்சர் என்ற அரசு அதிகாரத்தோடு கோவையில் அரசியல் செய்யும் செந்தில் பாலாஜியா… கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான ஏற்கனவே 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேலுமணியா என்பதுதான் கோவை மாநகராட்சியின் தற்போதைய போட்டியாக இருக்கிறது.

**வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *