வெளியே வந்ததும் ஹோட்டலுக்கு போன ராஜேந்திர பாலாஜி

politics

உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, திருச்சி சிறையிலிருந்து ராஜேந்திர பாலாஜி இன்று வெளியே வந்தார்.

அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அன்று நள்ளிரவு விருதுநகர் அழைத்துவரப்பட்ட ராஜேந்திர பாலாஜி 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 மாதம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்கவேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஜாமீன் சம்பந்தமான ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் அந்த ஆவணங்கள் திருச்சி மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டன.

இந்த சூழலில் திருச்சி சிறையிலிருந்து இன்று காலை வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி. பின்னர் ஒரு சில கட்சி நிர்வாகிகளுடன் அங்கிருந்து காரில் புறப்பட்ட ராஜேந்திர பாலாஜி நேரடியாக விருதுநகர் செல்லாமல் திருச்சி மன்னார்புரத்திலுள்ள கண்ணப்பா ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.

அதற்குள் அவரது ஆதரவாளர்கள் அந்த ஹோட்டல் முன்பு குவிந்தனர். ராஜேந்திர பாலாஜி ஹோட்டலில் இருந்து இறங்கி வரும் போது, ஆதரவாளர்களைப் பார்த்து மெல்லிய குரலில் போங்க போங்க என்று கூறிவிட்டு காரில் ஏறினார். பின்னர் அங்கிருந்தவர்களைப் பார்த்து நன்றி தெரிவித்து அவர் விருதுநகர் புறப்பட்டார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *