தலைமைச் செயலகமா, அதிமுக அலுவலகமா? இந்திய கம்யூனிஸ்ட்

Published On:

| By Balaji

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் போட்ட பதிவு, சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதனையடுத்து, எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என பேட்டி, ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் என போஸ்டர்களும் முளைத்தன.

இந்த நிலையில் நேற்று சுதந்திர தின நிகழ்வு முடிந்த பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 12 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அமைச்சர்கள் விவாதித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தனர்.

இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தனிப்பட்ட தங்கள் கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுகவில் நடந்து வரும் சச்சரவுகள் குறித்து நேற்று (ஆகஸ்ட் 16) கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “நேற்று நாடு சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் அறையில், 12 அமைச்சர்கள் கூடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆளும்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் மாறி, மாறிச் சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அதிமுகவினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூட்டறிக்கை வெளியாகியுள்ளது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தன்மைகள் குறித்த தெளிவோ, கொள்கையோ இல்லாத அதிமுக அரசின் ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் பதவி தேடி அலையும் சுயநலக் கும்பலாக சுருங்கிவிட்டது என்ற விமர்சனத்தை நடைபெறும் நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன என்று சாடிய முத்தரசன்,

“அரசு நிகழ்ச்சிகளை தனது கட்சி அரசியல் மேடையாக்கி பரப்புரை செய்து வரும் அதிமுக முதல்வர், அரசு ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் தனது கோஷ்டிக்கு ஆள் பிடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் எதிர்வினையாக மற்றொரு தரப்பினர் தற்போது அரசின் தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக்கி விட்டனர்” என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், “கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு உட்பட அரசின் அனைத்துப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. மக்கள் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி வரும் அதிமுக அரசின் அதிகார அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கது. பாஜக வகுப்புவாத, மதவெறி விஷப் பாம்பின் வாயில் சிக்கிய தவளையாகிவிட்ட அதிமுக ஆட்சியில் தொடரும் தார்மீக தகுதியை முற்றிலுமாக இழந்து விட்டது” என்றும் சாடியுள்ளார் முத்தரசன்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share