கன்னியாகுமரி பாதிப்புகளை விரைவில் சீர் செய்ய உத்தரவு!

politics

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்வதற்காகத் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்றார்.

முதலில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தோவாளையில் உள்ள பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை ஆய்வு செய்தார். பின்னர், தோவாளை, கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 75 நபர்களுக்கு, பாய், போர்வை அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அந்த நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, தோவாளை வட்டம், தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோயில் சுற்றுலா மாளிகையில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரனின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.

தொடர்ந்து, முதல்வரின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, “வெள்ள பாதிப்புகளைத் துரிதமாகச் சீர் செய்ய வேண்டும். நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, மேலாங்கோட்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வாழைப் பயிர் மற்றும் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்த முதல்வர் நிலத்துக்குச் சொந்தமான விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

இறுதியாகக் கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *