குளியல் வீடியோ லீக்: தொடரும் மாணவிகள் போராட்டம்!

இந்தியா

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பது போன்று வீடியோ வெளியான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலையில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலை கழகத்தில் மாணவிகள் விடுதியும் உள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து மாணவிகள் இந்த விடுதியில் தங்கிதான் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்தசூழலில் பல்கலை கழக மாணவர்கள் மத்தியில் சில வீடியோக்கள் நேற்று முதல் வைரலாகி வந்தன. அந்த வீடியோக்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் குளியல் வீடியோ என்று தகவல்கள் வெளியாகி மாணவிகள் மத்தியில் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து விடுதி மாணவிகள் நீதி கேட்டு நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த மாணவிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

சுமார் 60 வீடியோக்கள் இதுபோன்று வெளியாகியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் கசிந்தது. ஆனால் இதனை பல்கலைக் கழகம் முற்றிலும் மறுத்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரே சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளார் என்றும்,

அவர் அந்த வீடியோக்களை வேறு ஒரு நபருக்கு அனுப்பியபோது அந்த நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

“சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டது வருத்தமாக இருக்கிறது. எங்கள் மகள்கள் தான் எங்களுக்கு மரியாதை. ச

ம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்,”இது ஒரு முக்கியமான விஷயம் மற்றும் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியத்தைப் பற்றியது.

ஊடகங்கள் உட்பட நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தசூழலில் பல்கலைக் கழகம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ”எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவி தனது சொந்த புகைப்படங்கள்/வீடியோக்களை தனது காதலனுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

வேறு வீடியோ எதுவும் இல்லை. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்களையும் பெற்றோர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.எஸ் பாவா தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பயங்கரவாத செயலுக்கு முயற்சி : 4 பேர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *