Kமன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்

entertainment

ஆஸ்கர் விருது மேடையில் கிறிஸ் ராக்கை நடிகர் வில்ஸ்மித் நேற்று ( மார்ச் 28) கன்னத்தில் அறைந்தது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது.

கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மருத்துவக் குறைபாட்டை மையமாகக் கொண்டு காமெடியாக பேசியது தவறு, ஸ்மித் மேடையேறி அறைந்தது சரிதான் என ஆதரவாகவும், என்ன இருந்தாலும் வன்முறை தவறானது என அவரது செயலை எதிர்த்தும் இருவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பொங்கி வழிந்தன. பலத்த பாதுகாப்பு, திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல்கள் அடிப்படையில் நடைபெறும் நிகழ்வில் திடீர் என ஒருவர் மேடையேறி தாக்குவது சாத்தியமில்லாதது, பரபரப்புக்கும், விளம்பரத்திற்காக திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்கிற கருத்துகளும் வந்தன.

இந்த நிலையில், ஆஸ்கர் அமைப்பு அவரது செய்கையைத் தவறென கூறி அதன் மீதான விசாரணை நடத்த இருக்கும் முடிவை அறிவித்திருந்தார்கள். கிறிஸ் ராக் இது குறித்து காவல்துறையிடம் எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், வில் ஸ்மித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின்போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான், ஆனால் ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்சனை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன். பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. அகாடமியிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்வின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், உலகெங்கிருந்தும் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும், வில்லியம்ஸ் குடும்பத்திடமும், கிங் ரிச்சர்ட் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அற்புதமான ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டியது என்னால் கறை படிந்ததற்கு என்னுடைய நடத்தை குறித்து நான் ஆழமாக வருந்துகிறேன்.என்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

**இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *