இந்தப் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படங்கள் வெளியாக இருக்கின்றன. இவ்விரு படங்களின் ரிலீஸை எதிர்பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமுமே காத்திருக்கிறது. அடுத்ததாக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ஜெகமே தந்திரம். தனுஷின் 40ஆவது படமாக இது உருவாகியிருக்கிறது. தனுஷுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இந்தப் படம், கடந்த வருடம் மே 1ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. கொரோனா காரணத்தினால் தள்ளிப் போனது.
திரையரங்கில் வெளியாகாததால் ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் பரவின. அந்தத் தகவலை முழுவதுமாக மறுத்தார் தயாரிப்பாளரான சசிகாந்த். ஏன் படம் ஓடிடியில் வரவில்லை என்பதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கினார்கள். அந்த நாட்டின் சலுகைத் தொகையைப் பெற வேண்டுமென்றால், படம் திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டும். அதனால், கட்டாயம் தியேட்டரில் மட்டுமே வெளியாக வேண்டிய சூழலினால், சரியான தருணத்துக்காகக் காத்திருந்தது ஜெகமே தந்திரம்.
தற்போது அனைத்தும் நார்மலுக்குத் திரும்பிவருவதால், படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, படத்தை காதலர் தின சிறப்பாக பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு.
ஜெகமே தந்திரம் படத்தில் மதுரை கேங்ஸ்டராக தனுஷ் நடித்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். அவர்களோடு ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் கேஸ்மோவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலிருந்து வெளியான பாடலும் வைரலானது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘கர்ணன்’ மற்றும் அக்ஷய் குமாருடன் நடித்திருக்கும் இந்திப் படமான ‘அட்ராங்கி ரே’ படங்கள் அடுத்தடுத்து தனுஷுக்கு ரிலீஸ் லிஸ்டில் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.
*ஆதினி*�,