மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: அய்யாகண்ணு

விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: அய்யாகண்ணு

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை இரண்டு நாள்களுக்கு தற்காலிக வாபஸ் பெறுவதாகப் போராட்டக் குழுத்தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலைக்கு நஷ்டஈடு, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். தினம், தினம் பல்வேறு வடிவில் தொடரும் இப்போராட்டம் 35 நாள்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி இரவு டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இதுவரை போராட்டக் குழுவினரை ஆறு முறை சந்தித்துள்ளேன். அவர்கள் அமைச்சர்களைச் சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்துள்ளேன். அதன்படி உள்துறை, நிதி, நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை அமைச்சர்களைப் போராட்டக்காரர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர். நானும் அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். தற்போது விவசாயிகளுடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். எனவே விவசாயிகள் நலனுக்குத் தேவையான அனைத்து பலன்களையும் பெற்றுத் தருவோம். எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.

அடுத்து பேசிய போராட்டக் குழு தலைவர் அய்யாகண்ணு, “அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் இரண்டு நாள்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அமைச்சரிடமிருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும். உறுதிமொழிக் கடிதம் கிடைக்காவிடில் எங்களுடைய போராட்டம் இன்னும் தீவிரமடையும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon