தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி எடுத்துச்சென்ற நயினார் நாகேந்திரன் உதவியாளர்கள் நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூன்று பேரையும் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். மேலும், அவர்கள் மூவர் மீதும் தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உதயநிதி வீட்டிற்கு எதிரே இருக்கக்கூடிய நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவர்களுக்கு பணம் சப்ளை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பணத்தை பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனிடமிருந்து பெற்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து ரயிலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கில் மே 2-ஆம் தேதி நேரில் ஆஜராக இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையை இழுத்தடிப்பதற்காக அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் ரீதியாகவும் நயினார் நாகேந்திரன் முயற்சி செய்து வருவதாக 4 கோடி விவகாரம்… நயினார் விட்ட தூது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை கண்டுகொள்ளாமல் இருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரை நயினார் நாகேந்திரன் அணுகி கோரிக்கை வைத்திருப்பதாகவும், வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளுக்கு மென்மையான சில பிரஷர்கள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தோம்.
ஆனால், இந்த கேஸில் ஒவ்வொரு நாளும் என்னென்ன டெவலப்மெண்ட் நடந்துகொண்டிருக்கிறது என முதல்வருக்கு ரிப்போர்ட் சென்று கொண்டிருப்பதால் இதில் தலையிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கைவிரித்து விட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்தநிலையில் தான் நயினார் நாகேந்திரன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் கேசவ விநாயகனுக்கும் சம்மன் அனுப்பப்படாலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு, 4 கோடி வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
மக்களவை தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுதானே ஆகனும்