நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: கட்கரி

public

இந்திய சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. முதலில் இந்தியாவில் 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இன்று இந்திய நெடுஞ்சாலை திட்டங்களில் இனி சீன நிறுவனங்கள் நுழைய முடியாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பிடிஐ ஊடகத்துக்கு நேர்காணல் கொடுத்த நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். சாலை கட்டுமானத்திற்காகச் சீன முதலீட்டாளர்களைக் கொண்ட கூட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ள அவர், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள் நுழையாமல் இருப்பதையும் உறுதி செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களைத் தடை செய்து, இந்திய நிறுவனங்கள் அதிகளவு பங்கேற்கும் வகையில் விதிமுறைகளைத் தளர்த்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு வெளியிடப்படும்.

அதாவது, பெரிய திட்டங்களை ஏலம் எடுப்பதில் இந்திய நிறுவனங்கள் தகுதி பெறுகின்றன என்பதை உறுதி செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான முடிவை எடுத்துள்ளோம். தொழில்நுட்ப மற்றும் நிதி விதிமுறைகளைத் தளர்த்துவதற்காக ஒரு கூட்டத்தை நடத்துமாறு நெடுஞ்சாலைத் துறை செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.சந்து ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

”ஒரு ஒப்பந்தக்காரரால் ஒரு சிறிய திட்டத்திற்குத் தகுதி பெற முடிந்தால், அவரால் ஒரு பெரிய திட்டத்திற்கும் தகுதி பெற முடியும். இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமான விதிகளை மாற்றும்படி கேட்டுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை திட்டங்களைக் கைப்பற்ற இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த, திட்டங்களுக்கான தகுதி விதிமுறைகள் மறுவரையறை செய்யப்படும். எனினும், தொழில்நுட்பம், ஆலோசனை அல்லது வடிவமைப்பு போன்ற துறைகளில் வெளிநாட்டுக் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்கமாட்டோம் என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.எம்.இ குறித்து கட்கரி கூறுகையில், “உள்ளூர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கே ஊக்கமளிக்கப்படும். அதே சமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் வரவேற்கப்படும். அந்நிய முதலீட்டை ஊக்குவித்தாலும், சீன முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்து தற்சார்பு பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய அரசு குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கும், தொழிலுக்கும் உதவும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *