The Congress party responded to the PM's speech!

”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!

அரசியல் இந்தியா

இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் இன்று (மே 2) பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், பாஜக சார்பாக நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களில் பிரதமர் மோடி பங்கேற்று, காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநில கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதன்படி, காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இது பெரும் பேசுப்பொருளாக மாறியது. தேர்தல் பிரச்சாரத்தில் தோல்வி பயம் காரணமாக மோடி பொய் பேசி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் இடஒதுக்கீடு அமலானது!

அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா? என்று வரலாறு தெரியாமல் மோடி கேட்கிறார். இதுபோன்ற அறிவிப்போ, வாக்குறுதியோ காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இல்லை.

தேர்தல் பரப்புரைகளில் இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி உளறி வருகிறார். அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியல், பழங்குடியினர் இடஒதுக்கீடு அமலானது என்ற வரலாற்றை மோடி மறந்துவிட்டார். ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்கியது காங்கிரஸ் கட்சிதான்.

1951ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதையும் மோடி மறந்துவிட்டார். இந்த வரலாறு அவருக்கு தெரியவில்லை. 2014 முதல் பாஜக அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது” என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, “எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டில் 50% என்ற உச்ச வரம்பை நீக்குவதையும், அதற்காக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவருவதையும் பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

இதற்கு வழக்கம்போல் திசைதிருப்பாமல், திரிக்காமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பதவிக்கு உரிய கண்ணியத்தை மறந்துவிட்டார்!

காங்கிரஸ் தாலியை கூட பறித்துவிடும் என்று மோடி பேசியதற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர், “காங்கிரஸ் வீட்டை பறித்துவிடும், எருமையை பறித்துவிடும், தாலியை பறித்துவிடும் என விரக்தியின் விளிம்பில், தோல்வியின் பயத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரிடம் உள்ள 300 இடங்களில் 150ஐ, காங்கிரஸ் பறித்து ஆட்சியமைக்கும் என்பதால், இப்படி தனது பதவிக்கு உரிய கண்ணியத்தை மறந்து, பொய் இயந்திரமாக மாறியுள்ளார்.

காங்கிரஸ் அரசு மக்களிடம் இருந்து எதையும் எடுக்காது. மாறாக, மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக வீணாக்கிய பணத்தை, மக்களுக்கு எடுத்துக் கொடுக்கும். நமது அரசு அதானிகளுக்காக அல்ல, இந்தியர்களுக்காக..!” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கணிதத்தில் டிகிரி வைத்திருக்கிறீர்களா?

தொடர்ந்து, மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 இடங்களில் பாஜக தவிர வேறு எந்த கட்சியும் போட்டியிடவில்லை என பிரதமர் மோடி தவறான தகவலை தெரிவித்திருந்தார்.

இதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பவன் கெரா, “காங்கிரஸ் கட்சி 326 தொகுதிகளுக்கு இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முழு கணிதவியல் பாடத்திலும் டிகிரி வைத்திருக்கிறீர்களா?” என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிரிழந்த அரசு மகப்பேறு மருத்துவர்!

கவிதா ஜாமீன் வழக்கின் மீது மே 6ல் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!

  1. இப்பல்லாம் ஜியே பேசுறாரா அல்லது யாராச்சும் எழுதிக்கொடுத்து பேசுறாரா? அவரே சொந்தமா பேசுறாருனா, யாராச்சும் பதமா சொல்லிக்கொடுங்க. வேற யாராச்சும் எழுதிக்கொடுக்கறதா இருந்தா, கவனமா எழுதுங்க, பேசப் போறவரு ஒரு பிரதமரு, நாலாந்தரப் பேச்சாளர் அல்ல என்பதை மனதில் வச்சு எழுதிக்கொடுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *