சசிகலாவின் உடல்நிலை எப்படியிருக்கிறது? சிகிச்சை தரும் டாக்டர் பேட்டி!

public

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, நான்காண்டு சிறை வாசத்துக்குப் பின், வரும் 27 ஆம் தேதியன்று சிறையிலிருந்து விடுதலையாக இருந்த நிலையில், அவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு. தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகிவருவதால், அவருடைய விடுதலை தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஏற்கனெவே குறித்த தேதியில் குறித்த நேரத்தில் மருத்துவமனையிலேயே அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

அவருடைய விடுதலை குறித்து விவாதங்கள் தீவிரமாகியிருந்த நிலையில், திடீரென அவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், கொரோனா தொற்றிலிருந்து அவர் விரைவில் குணம் பெற்றுவிடுவாரா, அவருக்குத் தேவையான அளவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறதா, உயிருக்கு ஏதும் ஆபத்து உள்ளதா போன்ற விவாதங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. சசிகலாவுக்கு ஏற்கெனவே நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹைபோ தைராய்டு போன்ற பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். இன்சுலின் ஊசியும் தொடர்ந்து போட்டுக்கொள்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமாக இருப்பதாக வந்துள்ள தகவல்களால் அவருடைய குடும்பத்தினரும், அவருடைய விசுவாசிகளும் கடும் அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு, அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும், வெளியில் பரவும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் உண்மையில் அவருடைய உடல்நிலை எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள தமிழக மக்களும் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதனால் கடும் முயற்சிக்குப் பின், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிகிச்சை அளித்து வருபவரும், கொரோனா குறித்த தீவிரமான ஆராய்ச்சியில் இருப்பவருமான மிக முக்கியமான மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொண்டோம்.

பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் சசிகலாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் நம்மிடம் அவர் விரிவாக விளக்கினார். அவர் சொன்ன தகவல் உள்ளது உள்ளபடியே உங்களுக்காக…

‘‘சாதாரணமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு லேசான காய்ச்சல் வந்து போய்விடும். அதேபோல சசிகலாவுக்கும் சிறையில் காய்ச்சல் வந்திருக்கிறது. இதுபோன்று காய்ச்சல் ஏற்படும் நேரங்களில் கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்தால் பெரும்பாலும் ‘நெகட்டிவ்’ என்று வருவதற்கே வாய்ப்பு அதிகம். அவருக்கும் அப்படித்தான் வந்திருக்கிறது. அதற்குப் பின் ஜனவரி 20 ஆம் தேதியன்றுதான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அன்றைக்குதான் அவருக்கு தொற்று அதிகமாகியிருக்கிறது. மூச்சுத்திணறல் அதிகமானதும் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ‘எஸ்பிஓ2’ (Spo2) திறன் பல்ஸ் ஆக்சி மீட்டரில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவருடைய ஆக்ஸிஜன் செறிவு (Oxygen saturation) 79% மட்டுமே இருப்பதாகக் காண்பித்திருக்கிறது.

அதன்பின்பு, விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு சிடி ஸ்கேன் எடுத்தபோது, அவருக்கு நுரையீரல் தொற்று (நிமோனியா) சற்று கடுமையாகவே (corods- 5) என்ற அளவிற்கு இருப்பதும் கண்டறியப்பட்டது. 21 ஆம் தேதியன்று இரவு 9:30 மணிக்குதான் ஆர்டிபிசிஆர் ரிப்போர்ட்படி அவருக்கு கொரோனா தொற்று ‘பாசிட்டிவ்’ என்று வந்திருக்கிறது. உடனடியாக அவருக்கு உரிய மருந்துகள், ஊசிகள் மற்றும் டிரிப் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது.

அவருடைய சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு, ஒரு மணி நேரத்துக்கு 10 யூனிட் வீதமாக இன்சுலின் நரம்பு ஊசி (iv drip) மூலமாகக் கொடுக்கப்படுகிறது. ரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு Inj Clexane என்ற ஊசி செலுத்தப்படுகிறது. இது கொரோனா தொற்றின் பாதிப்பையும் குறைக்கும். ரத்த அணுக்கள் உறையாமல் தடுக்கும் Tab clopidogrel மற்றும் Tab aspirin ஆகிய மருந்துகளும் சேர்த்துத் தரப்படுகிறது.

இது மட்டுமின்றி, தொற்று அதிகமாகி நுரையீரல் வீக்கமடையாமல் இருப்பதற்காக Inj Methylprednisolone என்ற ஸ்டீராய்டு மருந்தும், Inj Remdesivir என்ற ஆன்ட்டி வைரஸ் மருந்தும், Inj Piptaz என்ற இரண்டு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் கலவையும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றைத் தவிர்த்து, NRBM எனப்படும் Non ReBreathing Mask உதவியுடன் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் விகிதம் ஆக்சிஜனும் உட்செலுத்தப்படுவதால் அவருடைய மூச்சுத்திறன் அதாவது ஆக்ஸிஜன் செறிவு (Oxygen saturation) Spo-2 79 % தற்போது 96 % அளவுக்கு உயர்ந்து சுவாசநிலை சீரடைந்திருக்கிறது. இப்போதைக்கு அவருக்கு இதற்கு மேல் சிகிச்சை தேவையில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு போன்றவற்றுக்கு அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவையனைத்தையும் சீராக வைப்பதற்கான மருந்துகளும் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சையின் காரணமாகத்தான், நுரையீரல் பாதிப்பைத் தவிர அவருடைய உடல்நிலை எல்லா விதங்களிலும் நன்றாக இருக்கிறது. இதை அவருக்கு வந்துள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகள் (GCS-E4V5M6) உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு மேல் அவருடைய உடல் ஒத்துழைப்பதைப் பொறுத்தே, அவரின் உடல்நிலையில் எத்தகைய முன்னேற்றம், எவ்வளவு விரைவாக ஏற்படும் என்பதைச் சொல்லமுடியும்.’’ என்று விலாவாரியாக விளக்கினார் அந்த மருத்துவ நிபுணர்.

தற்போதுள்ள நிலையில், ஒரு வார காலத்துக்குள் அவர் குணம் பெற்றுவிடுவார் என்று மருத்துவர்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவின் உடல் நலனுக்காக அவருடைய குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் பலவிதமான வேண்டுதல்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அவருக்காக மனதுக்குள் மெளனமாக எவ்வளவு பேர் என்னென்ன வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

**பாலசிங்கம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *