qசிறப்புக் கட்டுரை: அம்மாவும் அய்யப்பனும்!

public

**சி.முருகேஷ்பாபு**

எனக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். வீட்டின் வாசலில் பம்பரமோ, கோலியோ விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாத்தா ஒருவர் வீட்டுக்கு வந்தார். அம்மாவின் சித்தப்பா. அய்யப்பனுக்கு மாலை போட்டிருந்த அவர் தன் வீட்டு அய்யப்ப பூஜைக்கு எங்களை அழைக்க வந்திருந்தார். சித்தப்பா மீது பிரியமாக இருக்கும் என் அம்மா அன்று வீட்டு அடுக்களையைத் தாண்டி தலையைக்கூட நீட்டவில்லை. என் மூலமாகவே தூது விட்டுப் பேசி சித்தப்பா சாமியை அனுப்பிவிட்டார்.

‘ஏம்மா… தாத்தாவ பார்க்கக்கூட வெளில வரல?’ என்று கேட்ட என்னிடம், ‘நான் தலைக்கு குளிச்சிருந்தேன்ல… அப்டி நேரத்துல சாமி எதுக்க வரக் கூடாது… ஒரு தடவ மதுரைக்கு ஆச்சி வீட்டுக்குப் போகையில ராஜபாளையத்துல திமுதிமுனு அய்யப்ப சாமிகளா ஏறிட்டாங்க… நம்ம சீட்டச் சுத்தி சாமி கூட்டம்… நான் அப்படியே குன்னிப் போய் உக்காந்துட்டேன்… தலைக்கு குளிச்ச நேரத்துல இப்படி ஒரு சோதனையானு உள்ளுக்குள்ள புலம்பிகிட்டிருந்தேன் தெரியுமா… அய்யப்ப சாமி இருக்கையில நாம சுத்தபத்தமா இருக்கணும்…’ என்றார்.

**வீட்டில் மூன்று சாமிகள்!**

அய்யப்பன் என்றால் அம்மாவுக்கு அத்தனை பயபக்தி. எங்கள் வீட்டிலேயே மாலை போடும் வைபவம் எல்லாம் நடக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது மாலை போடும் ஆசை வந்தது. அடிப்படையில் பெரிய ஆன்மிகவாதியாக இல்லாத என் அப்பா, எனக்காகத் தானும் மாலை போட்டுக்கொண்டார். ஆக, எங்கள் வீட்டில் நான், என் அண்ணன், என் அப்பா என்று மூன்று சாமிகள்!

விரதம் என்றால் இப்போது இருப்பதுபோல ஃபாஸ்ட்ஃபுட் விரதமெல்லாம் கிடையாது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கும் விரதம் தை ஒன்றில்தான் முடியும். முழுமையாக அறுபது நாட்கள் அய்யப்ப விரதம் எங்கள் வீட்டில்!

அந்த அறுபது நாட்களும் அம்மா இரண்டு வேளை குளிப்பார். விளக்கு முன் நின்று சரணம் சொல்வார். தேடிவரும் அத்தனை சாமிகளுக்கும் பணிவிடை செய்வார். எங்கள் வீட்டில் பூஜை, இருமுடிக் கட்டு என்றால் அமர்க்களப்படும். பிரசாதம் மட்டுமே அத்தனை வகையாக இருக்கும். கருப்பனுக்கு எள்ளு உருண்டை, வடை மாலை, அம்மனுக்கு துள்ளு மாவு, பானைக்காரம், வாவர் சாமிக்கு ரொட்டி, இதுதவிர சுண்டல், பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் என்று விதவிதமான வெரைட்டிகளில் தயாராகும். அத்தனை வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். உடுத்தும் உடைகளில்கூட ஆடம்பரம் இருக்காது. கால்களில் செருப்பு அணிய மாட்டார்.

பள்ளிக்கூடத்துக்குச் சீருடை அணிந்து சென்றாலும் வீடு திரும்பியதும் நீல உடைதான் அணிய வேண்டும் (கறுப்பு, காவி எல்லாம் கூடாது… அய்யப்பன் நீல வஸ்திரதாரி என்று எங்கள் குருசாமி சொன்னதுதான் காரணம்). ஒருநாள் ஏதோ நினைவில் வீட்டில் கிடந்த கறுப்பு நிறக் கைலியை கட்டிவிட்டேன். ‘சாமி… அய்யப்பன் விளையாட்டு இல்ல… அந்த ஒழுங்குல இருந்து மாறக் கூடாது…’ என்று என்னை உடை மாற்ற வைத்ததோடு விளக்கு முன்னால் நின்று உக்கி (தோப்புக்கரணம்) போட்டார். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்… என்ற சரணத்தைச் சொன்னபடியே!

மூன்றே ஆண்டுகளில் எனக்கு அய்யப்பன் கோயில் அலுத்துப் போய்விட்டது. ஆனால், என் அப்பா முழு நம்பிக்கையோடு போகத் தொடங்கினார். 18 ஆண்டுகள் கோயிலுக்குப் போனார். அந்தப் பதினெட்டு ஆண்டுகளும் என் அம்மா அறுபது நாட்கள் விரதம் மேற்கொண்டார். ‘நாம இருக்கற விரதத்தோட பலன்லதான் சாமிகள் மலை ஏறுறதே… நாம சுத்தக் குறைவா இருந்துட்டோம்னா சாமிகள் மலைல கஷ்டப்பட்ருவாங்க…’ என்று அம்மா அதற்கு விளக்கமும் சொல்வார்.

**நிற்காத விரதம்**

18 மலைகள் போய் வந்தபிறகு என் அப்பாவுக்கு சில உடல்நலக் குறைகள் ஏற்பட்டன. அவரால் மலைப் பயணம் போக முடியாது என்ற சூழல். மாலை போடுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அந்த ஆண்டு கார்த்திகை பிறந்ததும் என் அம்மா விரதம் இருப்பதை நிறுத்தவில்லை. வழக்கம் போல குளியல், சரணம் சொல்வது, பூஜை செய்வது எல்லாம் நடக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் வந்த பிறகு முழுக் கதையும் கேட்பார். ‘இங்க பிள்ளையார் கோவில்ல இருந்து கட்டு தாங்கி கிளம்பினீங்கள்ல… பெறகு…’ என்பதாகத் தொடங்கும் அவர் உரையாடல்! அத்தனை ஆர்வம் இருக்கும் அவர் குரலில்.

எருமேலி சென்றதும் பேட்டைத் துள்ளல் செய்வோம். எல்லா சாமிகளும் கலர் கலரா பொடியைப் பூசிகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே வாவர் கோயில்ல சாமி கும்பிடுவோம்…’ என்றதும், ‘எல்லாரும் ஆடணுமா… உங்கப்பா ஆடுனாங்களா..?’ என்பார். எப்படி வழிப் பயணம்… என்ன சமையல்… எப்படி நடக்க வேண்டும்… எங்கு தங்குவது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

முன்பே பயணத் திட்டம் தெரியும் என்பதால், ‘இன்னிக்கு அரியக்குடி போயிருப்பாங்க… அழுதை ஆத்துல குளிச்சுட்டு கரிமலை ஏறத் தொடங்கியிருப்பாங்க… கரிமலைல தங்குனா தங்குவோம்… டைம் கிடைச்சா இறங்கிருவோம்னு சொல்லியிருக்காங்க… அநேகமா பெரியானை வட்டத்தில்தான் தங்குவாங்க…’ என்று சபரிமலைப் பயணத்தை அக்குவேறு ஆணிவேறாகச் சொல்வார். நாங்கள் மலைப்பயணம் சென்றாலும் எங்களையே நினைத்துக்கொண்டு எங்களுடனேயே பயணித்துக்கொண்டே இருப்பார்.

தரிசனம் முடித்து வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் கேள்வி நெய் நல்லா உறைஞ்சிருந்துச்சா என்பதுதான். ஏனென்றால் நம் விரத மகிமை நெய்யில் தெரிந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால், எங்கள் குருசாமி அது முழுக்க க்ளைமேட் சார்ந்த விஷயம்… அதை வெச்சு எதையும் சொல்ல முடியாது… அதனால்தான் யார் நெய், யார் தேங்காய்னு கண்டுபிடிக்க முடியாத வகையில் எல்லாத்தையும் மொத்தமா போட்டு உடைச்சு எடுத்திருவோம் என்பார்.

நாங்கள் போய் வரும் எல்லா ஆண்டிலும் அம்மா தன் கனவைச் சொல்வார்.

‘நம்ம மட்டும் தனியா போகணும்… பெரிய பாதைதான் போகணும்… அங்கங்க தங்கி சமைச்சு சாப்டுகிட்டு நிதானமா நடந்து போய் அய்யப்பனைப் பார்த்துட்டு வரணும்… படியேறிப் போய்ப் பார்க்கணும்… அதுக்கான வயசு இன்னும் வரலையே..!’

எங்கள் அப்பா ஒவ்வொரு வருடம் கோயிலுக்குச் சென்றபோதும் அம்மாவும் மானசீகமாக உடன் சென்றிருக்கிறார். அய்யப்பன் தரிசனம் அவருக்கும் கிடைக்கத்தான் செய்தது!

இப்போது அறுபதுகளைக் கடந்துவிட்டார் அம்மா. மாலை போடாமல் பதினெட்டுப் படி ஏறாமல் கோயிலுக்கும் போய் வந்துவிட்டார். ஆனால், அப்போதே அம்மா குருசாமிதான்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *