தனியார் பேருந்துகளின் முதலாளிகளும் தொழிலாளர்களும்!

public

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் தனியார் பேருந்து முதலாளிகளும் தொழிலாளிகளும் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

கடந்த 2020 ஆண்டு, பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதனை கட்டுபடுத்தும் வகையில் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் வாகனங்களில் அழைத்து சென்றது, சமூக இடைவெளியின்றி கூட்டங்களில் பங்கேற்றது போன்றவற்றால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது என மருத்துவத் துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் முடியும் முன்பே கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. இதனால், மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதியதாகப் பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் சாலையில் வாகனங்கள் ஏதும் ஓடாமல் வெறிச்சோடி கிடக்கிறது, மக்களும் வீட்டுக்குள் முடங்கிப்போய் உள்ளனர்.

இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது போல, தனியார் பேருந்து முதலாளிகளும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தனியார் பேருந்து முதலாளியும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கரிகாலன்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் சுமார் 4500 பேருந்துகள் உள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பேருந்து உள்ளது. மொத்தமாகப் பார்த்தால் சுமார் 9ஆயிரம் பேருந்துகள் இருக்கும். ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுநர், இரண்டு நடத்துநர், இரண்டு செக்கர் என ஆறுபேர் இருக்கிறார்கள். ஊரடங்குக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் வசூல் வரும், அதில் செலவுகள் போக மீதி நான்கு ஆயிரம் முதல் 8ஆயிரம் வரை கையில் நிற்கும். அதில் மெயிண்டனன்ஸ், டயர் மாற்றுவது, ஆயில் மாற்றுவது, எனப் பல செலவுகள் வேறு.

அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் ஏற்றியபோது டீசல் விலை லிட்டர் 60 ரூபாய் இருந்தது. தற்போது டீசல் விலை 88 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் பேருந்துகள் ஓடாமல் நிற்க வைக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆர்.டி.ஒ ஆபீஸில் வரி கட்டியாக வேண்டும். மூன்று மாதத்துக்கு 30ஆயிரம், இன்சூரன்ஸ் வருடத்துக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் செலுத்தவேண்டும். வருடத்துக்கு நான்கு செட் டயர் மாற்றியாகவேண்டும். ஒரு செட் டயர் குறைந்த விலையில் 32 ஆயிரத்துக்கு வாங்கினால்கூட, வருடத்துக்கு ஒன்னேக்கால் லட்சம் செலவு செய்யவேண்டும். இதுபோன்ற அனைத்து செலவுக்குமே தனியார் நிதி நிறுவனத்தில்தான் பைனான்ஸ் வாங்குகிறோம். தற்போது வருமானம் இல்லாத நேரத்தில் பைனான்ஸில் தவணை செலுத்தியாகவேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் வரி செலுத்தவேண்டும். இதுதவிர, வீட்டிலிருக்கும் ஓட்டுநர் நடத்துநர்கள் பலபேர் பசி பட்டினியால் கஷ்டப்பட்டுக்கொண்டு எங்களிடம் அட்வான்ஸ் கேட்கிறார்கள். நாங்களே என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிற நிலையில், அவர்களுக்கு உதவி செய்யமுடியாமல் கஷ்ட பட்டுவருகிறோம்.

அதனால்,வரியைத் தள்ளுபடி செய்யவேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சலுகை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். தனியார் பேருந்து முதலாளிகள் பலர் கடன் சுமையால் பேருந்துகளை விற்பனை செய்ய முன்வந்த நிலையிலும், அதை வாங்குவதற்கு கூட ஆட்கள் இல்லை” என்கிறார் வருத்தத்துடன்.

*-வணங்காமுடி*

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *